சிங்கப்பூர் இவ்வாண்டுக்கான வளர்ச்சி முன்னுரைப்பை ஏறத்தாழ 3.5 விழுக்காட்டுக்கு உயர்த்தி உள்ளது.
ஆண்டு அடிப்படையில் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில், எதிர்பார்த்ததைக் காட்டிலும் சிங்கப்பூர் பொருளியல் 5.4 விழுக்காடு என்னும் சிறப்பான நிலைக்கு வளர்ந்ததைத் தொடர்ந்து முன்னுரைப்பை அரசாங்கம் அதிகரித்து உள்ளது.
மூன்றாம் காலாண்டில் 4.1 விழுக்காடு வளர்ச்சி இருக்கும் என்ற அதிகாரபூர்வ கணிப்பை மிஞ்சி பொருளியல் வளர்ந்து உள்ளது.
இந்த ஆண்டின் பொருளியல் வளர்ச்சி 2 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரையில் இருக்கும் என்று இதற்கு முன்னர் கணிக்கப்பட்டதைக் காட்டிலும் தற்போது அதனை 3.5 விழுக்காட்டுக்கு உயர்த்தி இருப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சு தனது முன்னோடி மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவித்தது.
அந்த அறிக்கை வெள்ளிக்கிழமை (நவம்பர் 22) காலை வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டின் மூன்று காலாண்டுகளில், எதிர்பார்ப்பையும் தாண்டி சராசரி வளர்ச்சி 3.8 விழுக்காடு என்று சிறப்பாகப் பதிவானதைக் கவனத்தில் கொண்டு, ஆண்டு முழுமைக்குமான வளர்ச்சி முன்னுரைப்பு திருத்தப்பட்டு உள்ளதாக அமைச்சு கூறியது.
முன்னுரைப்பை அதிகரித்த வேளையில், உள்நாட்டு நிலவரங்களும் ஆக அண்மைய உலகப்போக்கும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அது குறிப்பிட்டது.
இருப்பினும், அடுத்த ஆண்டுக்கான வளர்ச்சி இந்த அளவுக்கு இருக்காது என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உலகப் பொருளியல் நிலவரத்தின் நிச்சயமற்ற தன்மை அதிகரிப்பதாலும் புதிதாகப் பொறுப்பேற்க இருக்கும் அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கைகள் மீது நிச்சயமற்ற போக்கு நிலவுவதாலும் சிங்கப்பூர் பொருளியல் 2025ஆம் ஆண்டு 1 விழுக்காடு முதல் 3 விழுக்காடு வரையிலான வளர்ச்சியைப் பதிவு செய்யக்கூடும் என்று அமைச்சு தனது அறிக்கையில் முன்னுரைத்து உள்ளது.
புவிசார் அரசியல் பூசல்கள் அதிகரிப்பதன் விளைவாக எண்ணெய் விலை அதிகரிப்பதுடன் நிச்சயமற்ற கொள்கையும் நிலவும் என்பதால் பொருளியல் இறக்கத்துக்கான அபாயங்களாக அவை பார்க்கப்படுகின்றன.
நிச்சயமற்ற கொள்கை, உலக முதலீடுகளையும் வர்த்தகத்தையும் சீர்குலைப்பதோடு உலக வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமைச்சு தனது பொருளியல் ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளது.
பணவீக்கத் தணிப்பு நடைமுறையில் உருவாகும் இடையூறுகள் இறுக்கமான நிதி நிலவரத்தை ஏற்படுத்தும். அத்துடன், நிதி முறையில் உணரப்படாத பாதிப்புகளை அவை தூண்டும் சாத்தியமும் உள்ளது.
இவற்றின் காரணமாக, சிங்கப்பூரின் முக்கிய வர்த்தகப் பங்காளிகள் பதிவுசெய்யும் ஒட்டுமொத்த பொருளியல் வளர்ச்சி விகிதம் 2024ஆம் ஆண்டைக் காட்டிலும் சற்று இறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சு குறிப்பிட்டு உள்ளது.