சிங்கப்பூரில் வேலை செய்யும்போது காயமடையும், உடல்நிலைப் பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களை பத்திரமாக அவர்களின் சொந்த நாட்டிலுள்ள வீட்டில் கொண்டுபோய் சேர்க்கும் சேவையில் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டு வருகிறது.
அவர்களுக்காகவே கடந்த 2019ஆம் ஆண்டு, ‘கடைசி தூர உதவித் திட்டத்தை’ (Last Mile Assistance Programme) அச்சங்கம் தொடங்கியது.
அது தொடங்கப்பட்ட ஆண்டிலேயே, காயமடைந்த இல்லப் பணிப்பெண் ஒருவரை அதன் தொண்டூழியர்கள் இந்தோனீசியாவுக்குக் கொண்டு சேர்த்தனர்.
மூன்று மாடி வீட்டின் மேலிருந்து கீழே விழுந்ததில் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டதால் அந்தப் பணிப்பெண்ணால் நடக்கவோ நிற்கவோ இயலவில்லை.
செஞ்சிலுவைச் சங்கத் தொண்டூழியர்கள் சக்கர நாற்காலி மூலம் அவரை விமானத்தில் ஏற்றி, உடன் சென்று இந்தோனீசியாவின் லெம்போக் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் கொண்டுபோய் பத்திரமாகச் சேர்த்தனர்.
விமானத்திலும் ஆம்புலன்ஸ் வாகனத்திலும் ஆறு மணிநேரப் பயணத்தில் அவருடன் தொண்டூழியர்கள் சென்றனர். நிற்க இயலாததால் அந்தப் பெண் மலம் கழிக்கவும் அவர்கள் உதவி செய்தனர்.
இதுவரை, இந்தியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த 12 வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கு அந்த மனிதாபிமானமிக்க உதவியை செஞ்சிலுவைச் சங்கம் செய்துள்ளது.
அந்த உதவித் திட்டம் குறித்து சங்கம் தற்போதுதான் முதல்முறை ஊடகங்களிடம் பேசி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உதவி செய்யும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, சங்கத்தின் உலக ஈடுபாட்டு துணை இயக்குநர் ரெபேக்கா லிம் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டு இரண்டாக இருந்த சம்பவங்கள் கடந்த ஆண்டு ஐந்துக்கு அதிகரித்தது.
கடந்த 2018ஆம் ஆண்டு சங்கத்தின் பயிற்சி ஊழியராக இருந்த திருவாட்டி லிம் என் குயி என்பவர் இப்படி ஒரு திட்டம் உருவாவதற்கான யோசனையைத் தெரிவித்தார்.
காயமடையும் உடல்நிலை பாதிக்கப்படும் வெளிநாட்டு ஊழியர்களும் பணிப்பெண்களும் தனியாக நாடு திரும்புவதைக் கண்ட அவர், அதில் சங்கம் உதவி செய்வதற்கான வழிவகைகளை நாடினார்.
அதற்காக இல்லப் பணியாளர் மையம் (CDE), வெளிநாட்டு ஊழியர் நிலையம் (MWC) போன்ற அரசு சாரா அமைப்புகளுடன் (என்ஜிஓ) அவர் பேச்சு நடத்தினார்.
“பாதிக்கப்படும் ஊழியர்கள் சொந்தமாக விமானப் பயணம் செய்யவும் தங்களது உடைமைகளைக் கொண்டு செல்லவும் சிரமப்படுகின்றனர்,” என்று கூறிய சங்கத்தின் நிர்வாகி திருமதி டான் ஜியா குயி, “நாடு திரும்பிய பின்னர் சிகிச்சைக்குச் செல்லும் தெரிவுகளும் அவர்களுக்குத் தெரிவதில்லை,” என்றார்.
மேலும், அந்த ஊழியர்கள் பத்திரமாக ஊர் சென்று சேர்ந்தார்களா என்பதுகூட இங்குள்ள என்ஜிஓக்களுக்குத் தெரிவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


