தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலியல் சர்ச்சையில் சிக்கிய மலேசிய நிறுவனம் தொடர்பான விசாரணையுடன் நேரடித் தொடர்பில்லை: சிங்கப்பூர் உணவகம்

2 mins read
d011858b-8801-4515-8409-919b8633d866
குளோபல் இக்வான் சர்விசஸ் நிறுவனம் தொடர்புடைய விசாரணைக்கும் தனக்கும் எவ்வித நேரடித் தொடர்பும் இல்லை என்று நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள மிஹ்ரிமா உணவகம் தெரிவித்தது. அந்த நிறுவனம் தனது வர்த்தக ஆலோசகராக மட்டுமே செயல்பட்டு வருவதாக மிஹ்ரிமா உணவகம் செப்டம்பர் 15ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது. - மிஹ்ரிமா உணவகம்/இன்ஸ்டகிராம்

மலேசியாவில் செயல்பட்டு வந்த குளோபல் இக்வான் சர்விசஸ் அண்ட் பிஸ்னஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சமயப் பள்ளிகள் மூடப்படும் என்று சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம் அண்மையில் தெரிவித்தது.

தடை செய்யப்பட்ட அல் அர்க்காம் அமைப்புடன் அந்த நிறுவனத்துக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அல் அர்க்காம் சமய அமைப்பின் சித்தாந்தம் சிலாங்கூரில் தடை செய்யப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் சித்தாந்தத்தைப் பரப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குளோபல் இக்வான் சர்விசஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 20 சமயப் பள்ளிகளில் செப்டம்பர் 11ஆம் தேதியன்று அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.

அங்கிருந்த 402 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அவர்களில் சிலர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக 171 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமது நிறுவனத்துக்குச் சொந்தமான பள்ளிகளில் ஓரிரு பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக குளோபல் இக்வான் சர்விசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நசீருதீன் முகம்மது அலி ஒப்புக்கொண்டார்.

ஆனால் ஆள் கடத்தல், அடிமைத்தனம் ஆகியவற்றில் தமது நிறுவனம் ஈடுபடவில்லை என்றார் அவர்.

இதற்கிடையே, சர்ச்சைக்குரிய குளோபல் இக்வான் சர்விசஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய உணவகம் ஒன்று சிங்கப்பூரில் உள்ளது.

குளோபல் இக்வான் சர்விசஸ் நிறுவனம் தொடர்புடைய விசாரணைக்கும் தனக்கும் எவ்வித நேரடித் தொடர்பும் இல்லை என்று நார்த் பிரிட்ஜ் சாலையில் உள்ள மிஹ்ரிமா உணவகம் தெரிவித்தது.

அந்த நிறுவனம் தனது வர்த்தக ஆலோசகராக மட்டுமே செயல்பட்டு வருவதாக மிஹ்ரிமா உணவகம் செப்டம்பர் 15ஆம் தேதி அறிக்கை வெளியிட்டது.

விசாரணை காரணமாக தமது நற்பெயர் பாதிக்கப்படும் என்று உணவகம் கவலை தெரிவித்தது.

அந்த உணவகத்தில் மலேசிய உணவு வகைகள் விற்கப்படுகின்றன.

மிஹ்ரிமா உணவகம் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28ஆம் தேதியன்று திறக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

அந்த உணவகத்துக்கு இரண்டு உரிமையாளர்கள் உள்ளனர் என்றும் அவர்கள் இருவரும் சிங்கப்பூரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்