சிங்கப்பூர் அதன் 2030ஆம் ஆண்டு பருவநிலை இலக்குகளை அடைவதற்கான திட்டங்கள் குறித்த தகவல்களை முதன்முறையாக அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐக்கிய நாட்டு நிறுவனத்திடம் அறிக்கை ஒன்றை சிங்கப்பூர் சமர்ப்பித்தது. ஈராண்டுகளுக்கு ஒருமுறை வரையப்படும் அந்த அறிக்கையில் ஒரு நாட்டின் பசுமை வாயு (greenhouse gas) தொடர்பான முழு விவரங்கள், பருவநிலை இலக்குகளை அடைவதன் தொடர்பில் காணப்பட்டுள்ள முன்னேற்றம் ஆகிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
‘சிங்கப்பூர் பசுமைத் திட்டம் 2030’, நீடித்த நிலைத்தன்மை அம்சங்களைப் பின்பற்றுவதற்கான வழிகாட்டித் திட்டமாக விளங்குகிறது. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான சில வழிமுறைகள் அத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
எனினும், ஐக்கிய நாட்டு நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைதான் எந்தெந்த முறைகள் எவ்வளவு கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்க உதவக்கூடும் என்ற விவரங்களைத் தெரிவிக்கவல்லது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளில் ஆக்ககரமான முறையில் எரிசக்தியைப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள், தொழில்துறை நடவடிக்கைகளினால் வெளிவரும் கரியமில வாயுவைச் சேகரிக்கும் தொழில்நுட்ப முறை, நீடித்த நிலைத்தன்மை அம்சங்கொண்ட பசுமை எரிசக்தியை இறக்குமதி செய்வது ஆகியவை ஆக அதிக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கக்கூடியவை என்பது தெரிய வந்துள்ளது.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின் வாயிலாக சிங்கப்பூர், 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 11,990 கிலோ டன் அளவு கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்துக்கொள்ளக்கூடும். இது, 2022ஆம் ஆண்டு சிங்கப்பூர் வெளியிட்ட கரியமில வாயு அளவில் 20 விழுக்காடாகும்.
ஆக்ககரமான முறையில் எரிசக்தியைப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள், அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளால் குறைக்கப்படக்கூடிய கரியமில வாயு அளவில் 30 விழுக்காடு பங்கு வகிக்கக்கூடும். தொழில்துறை நடவடிக்கைகளினால் வெளிவரும் கரியமில வாயுவைச் சேகரிக்கும் தொழில்நுட்ப முறையைப் பொறுத்தவரை அந்த விகிதம் ஏறத்தாழ 20 விழுக்காடாகும். அதேபோல் நீடித்த நிலைத்தன்மை அம்சங்கொண்ட எரிசக்தியை இறக்குமதி செய்வது சுமார் 20 விழுக்காடு பங்கு வகிக்கக்கூடும்.
அந்த வகையில், அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றக்கூடிய துறைகளில் உள்ள நிறுவனங்கள், ஆக்ககரமான எரிசக்தியைப் பயன்படுத்த வகைசெய்யும் இயந்திரங்களை பயன்படுத்துமாறு ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தொழில்துறை நடவடிக்கைகளினால் வெளிவரும் கரியமில வாயுவைச் சேகரிக்கும் தொழில்நுட்ப முறையைச் செயல்படுத்த இங்கு போதுமான நிலத்தடிப் பகுதிகள் இல்லாததால் சிங்கப்பூர் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தேசிய பருவநிலை மாற்ற செயலகம் (NCCS) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தது.
நீடித்த நிலைத்தன்மை அம்சம் கொண்ட எரிசக்தியை இறக்குமதி செய்வதன் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரிமத்தைக் குறைவாகப் பயன்படுத்தும் எரிசக்தியை அண்டைநாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக சிங்கப்பூர் முன்னதாக அறிவித்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அவ்வாறு இறக்குமதியாகும் எரிசக்தி, 2035ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூருக்குத் தேவையான எரிசக்தியில் ஏறக்குறைய 30 விழுக்காடு பங்கு வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

