சிங்கப்பூர், அமெரிக்க கூட்டு முயற்சியில் $6.5 மில்லியனுக்கும் அதிகமான மோசடி தடுக்கப்பட்டது

2 mins read
8e2d3ff3-6fa6-4dcf-8792-46079b4ac9bd
பணத்தை மீட்க அமெரிக்க அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்தது. - கோப்புப் படம்: சாவ் பாவ்

சிங்கப்பூர் சார்ந்த ஒரு முதலீட்டு வங்கி நிறுவனத்தின் தலைமை நிர்வாகியிடம் இருந்து அனுப்பப்படுவதைப் போல போலியான மின்னஞ்சலும் குறுஞ்செய்தியும் பெற்ற அமெரிக்க ஊழியர் ஒருவர் யுஎஸ் 6.66 மில்லியன் டாலரை ($8.7 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மோசடிப் பேர்வழியின் அமெரிக்க வங்கிக் கணக்குக்கு மாற்றத் தொடங்கினார்.

சிங்கப்பூர் காவல்துறையின் மோசடி எதிர்ப்பு தளபத்தியமும் அமெரிக்க அதிகாரிகளும் மோசடி வர்த்தக மின்னஞ்சலை இடைமறித்து யுஎஸ் 5 மில்லியன் டாலருக்கும் அதிகமான (S$6.5) தொகை இழப்பைத் தடுத்துள்ளனர் என்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 8) சிங்கப்பூர் காவல் துறை கூறியது.

இத்தகைய மோசடிகளில் வணிகப் பங்காளிகள் அல்லது ஊழியர்கள் போன்று போலி மின்னஞ்சல்கள் மூலம் ஏமாற்றப்படுகின்றனர்.

அந்த ஊழியர் செப்டம்பர் 19ஆம் தேதி குறுஞ்செய்தியைப் பெற்றுள்ளார். தொடர்ந்து சில ரகசிய கையகப்படுத்தல்களுக்காக அமெரிக்காவில் உள்ள வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றிவிடுமாறு மின்னஞ்சல் அனுப்பட்டுள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மோசடிக்காரர் தலைமை நிர்வாகியின் முழுப் பெயருடன் அவரது மின்னஞ்சலைப் போன்றே இருக்கும் ஒரு மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தியுள்ளார்.

அந்த ஊழியர் செப்டம்பர் 19, 20 தேதிகளில் மோசடிக்காரரின் வங்கிக் கணக்கிற்கு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார்.

செப்டம்பர் 20 அன்று அதேபோன்ற குறுஞ்செய்தியைப் பெற்ற அவரது சக ஊழியர், தலைமை நிர்வாகியின் மின்னஞ்சல் முகவரியை சரிபார்த்தபோது அந்த ஊழியர் மோசடியைக் கண்டுபிடித்தார். அன்றே நிறுவனம் காவல்துறையில் புகார் செய்தது. உடனடியாக பணப் பரிவர்த்தனையை அமெரிக்க அதிகாரிகள் இடைமறித்தனர்.

அமெரிக்க வங்கிக் கணக்கில் தொகை வெற்றிகரமாக இடைமறிக்கப்பட்டதாக செப்டம்பர் 26 அன்று, மோசடி எதிர்ப்பு தளபத்தியத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

பணத்தை மீட்க அமெரிக்க அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்