ஆசியானில் திமோர் லெஸ்டே முழுமையாகப் பங்களிக்க சிங்கப்பூர் உதவும்: பிரதமர் லாரன்ஸ் வோங்

ஆசியானில் திமோர் லெஸ்டே முழுமையாகப் பங்களிக்க சிங்கப்பூர் உதவும்: பிரதமர் லாரன்ஸ் வோங்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

03 Jul 2026 - 8:02 pm

2 mins read

திலி: ஆசியான் அமைப்பில் உறுப்பினராக இணைந்து திமோர் லெஸ்டே பயனடைவதுடன், முழுமையான பங்களிப்பை வழங்கவும் சிங்கப்பூர் உதவ விரும்புவதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஜூலை 3ஆம் தேதி தெரிவித்தார் .

மேலும், வட்டாரக் கூட்டமைப்பில் ஓர் அங்கமாக இருப்பது என்பது உறுப்பினர் தகுதியால் பயனடைவது மட்டுமன்று, உறுப்பு நாடுகள் அந்த அமைப்பிற்கு வழங்கும் பங்களிப்பையும் பொறுத்தது என அவர் கூறினார்.

திமோர்-லெஸ்டேவுக்கான தமது இரண்டு நாள் பயணத்தின் இறுதியில் சிங்கப்பூர் ஊடகங்களிடம் பேசிய பிரதமர் வோங், திமோர்-லெஸ்டே ஆசியானில் இணைய உதவுவதற்காக முன்பு தொடங்கப்பட்ட ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தை மேம்படுத்தி, அந்நாட்டுக்கு இயன்றவரை சிங்கப்பூர் உதவி வழங்க இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

திமோர் லெஸ்டே பிரதமருடன் இணைந்து வழங்கிய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், புதிய ஆசியான் உறுப்பினரான அந்நாடு கூட்டமைப்போடு முழுமையாக ஒருங்கிணைவதற்கு உதவும் வகையில், திமோர் லெஸ்டேவுக்கான ஆதரவுத் திட்டத்தைச் சிங்கப்பூர் மேலும் மேம்படுத்தும் என பிரதமர் வோங் அறிவித்திருந்தார் .

இந்த வட்டாரக் கூட்டமைப்பில் உறுப்பினராவதற்கு 2011ஆம் ஆண்டு அந்நாடு விண்ணப்பித்திருந்தது. 2022ஆம் ஆண்டு பார்வையாளர்கள் தகுதியைப் பெற்ற திமோர் லெஸ்டே, 2025ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி அதிகாரபூர்வமாக ஆசியானின் 11வது உறுப்பு நாடாக இணைந்தது.

ஆசியான் உறுப்பினராக அந்நாடு முழுமையான பங்களிப்பை வழங்க உதவுவதே நமது அடுத்த கட்டமாகும் எனக் கூறிய திரு வோங், 2029ஆம் ஆண்டில் ஆசியான் அமைப்பிற்குத் தலைமை தாங்க திமோர் லெஸ்டே விரும்புவதாகக் கூறினார்.

இதனால், அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள அந்நாடு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

திமோர்-லெஸ்டேவிற்குச் சென்ற முதல் சிங்கப்பூர் பிரதமர் என்ற முறையில் தமது பயணத்தை பிரதமர் வோங் நினைவுகூர்ந்தார்.

ஆசியானில் உறுப்பினராகி ஒரு புதிய கட்டத்திற்குள் திமோர் லெஸ்டே நுழைவதால், அந்நாட்டு அதிகாரிகள் தங்கள் எதிர்காலம் குறித்து மிகுந்த நம்பிக்கையுடனும் ஊக்கத்துடனும் இருப்பதை உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

“இது அவர்களுக்குத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் ஒரு பயணம். இது அந்நாட்டின் வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டம். அதில் சிங்கப்பூரும் ஒரு பங்காற்ற விரும்புகிறது,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
திமோர் லெஸ்டேபிரதமர்லாரன்ஸ் வோங்ஆசியான்உதவி