முப்பரிமாண அச்சில் உருவாகும் சிங்கப்பூரின் முதல் நடையர் பாலம்

ஜூரோங் ஆற்றின் குறுக்கே 2028க்குள் கட்டிமுடிக்கப்படும்

முப்பரிமாண அச்சில் உருவாகும் சிங்கப்பூரின் முதல் நடையர் பாலம்

2 mins read
cd590584-3abf-46a4-957a-5550fefd2d8e
ஜூரோங்கில் கட்டப்பட்டு வரும் நடையர் பாலத்தின் ஒரு பகுதி முப்பரிமாண அச்சுமுறையில் உருவாகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

சிங்கப்பூர் கட்டுமானத் துறையின் முக்கிய முன்னேற்றமாக, முப்பரிமாண அச்சு முறையில் (3D-printing) கட்டப்படும் முதல் நடையர் பாலம் 2028ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

ஜூரோங் ஆற்றின் குறுக்கே அமையவிருக்கும் இப்பாலம், ஜூரோங் வெஸ்ட் குடியிருப்பாளர்களைப் புதிய தெங்கா நகருடன் இணைக்கும்.

ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 42, புளோக் 410 அருகே கட்டப்படும் பாலம் 10 மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்டது.

ஓவியரின் கைவண்ணத்தில், ஜூரோங் ஆற்றின் குறுக்கே அமையவிருக்கும் நடையர் பாலம்.
ஓவியரின் கைவண்ணத்தில், ஜூரோங் ஆற்றின் குறுக்கே அமையவிருக்கும் நடையர் பாலம். - படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்

மனிதவளம் சேமிப்பு

மனிதவளப் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் கட்டுமானத் திறனை அதிகரிக்கவும் இந்த நவீனத் தொழில்நுட்பத்தை நிலப் போக்குவரத்து ஆணையம் பயன்படுத்துகிறது.

இயந்திர மனிதர்கள் மூலம் கான்கிரீட்டைக் கொண்டு அச்சிடப்படுவதால், மனிதவளம் 50 விழுக்காடுவரை சேமிக்கப்படும். மேலும், பாலத்தின் ஒரு பகுதியை உருவாக்கத் தேவைப்படும் நேரம் ஒரு நாளிலிருந்து நான்கு மணிநேரமாகக் குறையும்.

இதற்கான ஆய்வுப் பணிகள் 2023 ஜனவரியில் $1.4 மில்லியன் செலவில் தொடங்கப்பட்டன.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சில தனியார் பொறியியல் நிறுவனங்களுடன் இணைந்து ஆணையம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது.

ஏப்ரல் 2ஆம் தேதி, சிறிய அளவிலான மாதிரியில் 18 டன் தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டிகள் பாலத்தில் வைக்கப்பட்டு அதன் உறுதித்தன்மை சோதிக்கப்பட்டது.

முப்பரிமாண அச்சு முறையில், சிமெண்ட், மணல், தண்ணீர் கலந்த கலவை அடுக்கு அடுக்காக அச்சிடப்படுகிறது. சரியான பதத்தில் கலவையை உருவாக்கி, சீரான வேகத்தில் அச்சிடுவது அவசியம்.

முப்பரிமாண அச்சுமுறையில் உருவான கான்கிரீட் சோதிக்கப்படுகிறது.
முப்பரிமாண அச்சுமுறையில் உருவான கான்கிரீட் சோதிக்கப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாலம் 10 கான்கிரீட் துண்டுகளைக் கொண்டிருக்கும். அவை எஃகு வடங்களால் ஒன்றாக இணைக்கப்படும். இந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் மற்றக் கட்டுமானத் திட்டங்களிலும் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து ஆணையம் ஆய்வு செய்யும்.

தற்போது உட்லண்ட்சில் உள்ள குழந்தைப் பராமரிப்பு நிலையம் ஒன்றின் வெளிப்புறச் சுவர்களைக் கட்ட, முப்பரிமாண அச்சுமுறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்