மேலும் 200 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களைப் பயிற்றுவிக்கச் சிங்கப்பூர் முயற்சி

மேலும் 200 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களைப் பயிற்றுவிக்கச் சிங்கப்பூர் முயற்சி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

16 Nov 2026 - 5:42 pm

2 mins read

தரையிறங்குவதற்கு முன்பு வரும் விமானங்களை வரிசைப்படுத்துவது முதல், புறப்படும் விமானங்களை அவற்றின் பயண உயரத்திற்கு வழிநடத்துவது வரை, சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஆகாயவழி போக்குவரத்தை இரவு பகலாகத் தடையின்றி இயக்கி வருகின்றனர்.

சிக்கலான போக்குவரத்து முறைகளையும் ஏற்படக்கூடிய இடையூறுகளையும் முன்கூட்டியே கணிக்கும் நவீனக் கருவிகள் இன்று உள்ளபோதிலும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு என்பது அடிப்படையில் மனிதர்களால் இயக்கப்படும் ஒரு பணியாக உள்ளது.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளராக 35 ஆண்டுகளுக்கும் மேலான தமது வாழ்க்கைத்தொழிலில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் கண்டுள்ளார், 58 வயது கதிர்வேலு கிருஷ்ணன். தலையணி ஒலிவாங்கிகளை அணிந்துகொண்டு ஒரு திரைக்குப் பின்னால் அமர்ந்திருப்பவரின் முக்கியத்துவத்திற்கு அவர் சான்றாக விளங்குகிறார்.

“புதிய அமைப்புமுறைகளும் மேம்பட்ட தானியக்கத் தொழில்நுட்பமும் தகவல்களைச் செயல்முறைப்படுத்தவும் சூழ்நிலைகளை முன்கூட்டியே கணிக்கவும் அதிகரித்துவரும் சிக்கலான விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கவும் நமக்கு உதவக்கூடும். ஆனால், இத்தொழில்நுட்பங்கள் இறுதியில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குத் துணையாக இருப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.

“கருவிகள் எவ்வளவுதான் நவீனமடைந்தாலும், சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, சரியான முடிவெடுக்கும் திறனுடன் செயல்படக்கூடிய நன்கு பயிற்சிபெற்ற ஓர் அதிகாரி நமக்குத் தேவை,” என்று திரு கதிர்வேலு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கு அதிக நேரமும் கடுமையான பயிற்சியும் தேவை என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பயிற்சிக்கான மூத்த தலைவருமான திரு கதிர்வேலு கூறினார்.

சாங்கி விமான நிலையத்தின் 5ஆம் முனையம் திறக்கப்படுவதற்குச் சிங்கப்பூர் தயாராகிவரும் நிலையில், அதிகரிக்கக்கூடிய விமானப் பயணங்களை நிர்வகிக்க மேலும் பல விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தேவைப்படுவார்கள்.

தற்போது கிட்டத்தட்ட 500ஆக உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் எண்ணிக்கையை, 2030களின் நடுப்பகுதிக்குள் ஏறக்குறைய 700ஆக உயர்த்த சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்பு முயற்சிக்கு ஆதரவாக அடுத்த 15 ஆண்டுகளில் 500 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யப்படவுள்ளது. அதோடு, புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்கு 20,000 வெள்ளி சேர்க்கை ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

தற்போது பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 64,000 வெள்ளி தொடக்கச் சம்பளமும், பட்டயப் படிப்பை முடித்தவர்களுக்கு ஆண்டுக்கு ஏறக்குறைய 49,000 வெள்ளி தொடக்கச் சம்பளமும் வழங்கப்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்
விமானம்போக்குவரத்துஆணையம்