சிங்கப்பூரில் உள்ள நிலத் தட்டுப்பாடு காரணமாக மக்களின் நலன் கருதி பல புதிய ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டியுள்ளது.
அதன் அங்கமாக பாலங்களுக்குக் கீழ் உள்ள இடங்களை விளையாட்டுத் தளங்களாக மாற்றும் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதுபோன்ற இடங்களைப் பராமரிப்பது சவாலாக இருந்தாலும் அவ்விடங்கள் பல புதிய சாதகங்களையும் எதிர்காலத்துக்கு வழங்குவதாக அதனை ஏற்று நடத்தும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூரின் வடமேற்கே ஏறத்தாழ 60,000 சதுர அடி நிலப்பரப்பு அமைந்துள்ளது என்பது பலரை ஆச்சரியப்படுத்தும் தகவல்.
யாரும் எதிர்பார்க்கமுடியாத விதமாக, வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கும் சிறிய காட்டுப் பகுதிக்கும் இடையே ஐந்து பிக்கல்பால் மைதானங்கள், நான்கு ஃபுட்சால் திடல்கள், ஓர் உடற்பயிற்சி மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய விளையாட்டு மையம் புக்கிட் தீமா விரைவுச்சாலைக்குக் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தின் மேல் வாகனங்கள் உறுமிக்கொண்டு செல்லும் ஒலி சதா கேட்டுக்கொண்டே இருக்கும்.
‘ஆர்க் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ்’ எனப்படும் அந்த விளையாட்டு மையம் புக்கிட் தீமா விரைவுச் சாலையில் உள்ள ‘காலிபாத்து’ என்ற பாலத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ளது. புக்கிட் பாஞ்சாங் பூங்கா இணைப்புடன் அமைந்துள்ள இந்த மையம் இவ்வாண்டு தொடக்கத்தில் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
வெஸ்ட் கோஸ்ட் மேம்பாலச் சாலைக்குக் கீழ் ‘சால்ட் & லைட் ஆர்ச்சரி’ என்ற வில் வித்தை தளம் ஒன்றும், 2023ஆம் ஆண்டுமுதல் புக்கிட் மேரா மேம்பாலச் சாலைக்குக் கீழ் ‘பிரிட்டிஷ் ஸ்போர்ட்ஸ்’ டென்னிஸ் மைதானமும் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று பல பெருவழிச்சாலைகளில் உள்ள பாலங்களின் கீழ் உள்ள இடங்கள் வருங்காலத்தில் விளையாட்டுகளுக்கென்றே ஒதுக்கப்படவுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் 100 மேம்பாலச் சாலைகள் உள்ளன. அவற்றின்கீழ் 60 ஹெக்டர் அல்லது 84 காற்பந்து திடல்கள் அளவிலான நிலம் எதற்கும் பயன்படாத நிலையில் உள்ளன. உள்கட்டமைப்புகளால் அவை அந்த நிலைக்குத் தள்ளப்பட்டன.
அந்நிலங்களைப் பல வகைகளில் அரசாங்கம் மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப மாற்றுவது குறித்து ஆய்வு செய்ததில், விளையாட்டு மையங்களை அமைப்பதே சிறந்த தேர்வாக அமைந்தது.

