அன்பைப் பகிர்வதே அர்த்தமிகு பண்டிகை

3 mins read
ஜாலான் காயு ஹார்மனி சர்க்கிளுடன் இணைந்து பிரசன்ன தேவாலயம் ஒருங்கிணைத்த அன்பளிப்புப் பைகள் விநியோகம், பயனாளிகள் மத்தியில் நல்லிணக்க கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைப்  பரவச் செய்தது. 
77eda9ba-d886-46c4-947c-1ccf09673ac8
அன்பளிப்புப் பைகள் விநியோக நிகழ்ச்சியில், பிரசன்ன தேவாலயத்தின் செயல் தலைமை ஆயர் அருள்­திரு எடி­சன் நேச­கு­மார் வில்­சன் (வலமிருந்து 3வது), ஆலயச் சேகரக் குழு அங்கத்தினர் ஆகியோருடன் ஜாலான் காயு நல்லிணக்க வட்டத்தின் தலைவர் முஹம்மது பின் இஸ்மாயில் (வலமிருந்து 4வது) மற்றும் நல்லிணக்க வட்ட உறுப்பினர்கள். - படம்: திருச்செல்வம் அஞ்சப்பன்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஜாலான் காயு வட்டாரத்தில் உள்ள 152 வசதி குறைந்த குடும்பங்களுக்குக் கிறிஸ்துமஸ் சிறப்பு லாக் கேக், உணவு, மளிகைப் பொருள்கள், பற்றுச்சீட்டுகள் உள்ளிட்டவை அடங்கிய அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன. 
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஜாலான் காயு வட்டாரத்தில் உள்ள 152 வசதி குறைந்த குடும்பங்களுக்குக் கிறிஸ்துமஸ் சிறப்பு லாக் கேக், உணவு, மளிகைப் பொருள்கள், பற்றுச்சீட்டுகள் உள்ளிட்டவை அடங்கிய அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.  - படம்: திருச்செல்வம் அஞ்சப்பன்

சிறிய அளவிலான கனிவு நிறைந்த நடவடிக்கையும் தேவையுள்ளோர் மத்தியில் பேரளவிலான மகிழ்வை உண்டாக்கும்.

அந்த நோக்குடன் வறியோருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை உணர்வை அளித்தது, நல்லிணக்க வட்டத்துடன் (ஹார்மனி சர்க்கிள்) பிரசன்ன தேவாலயம் இணைந்து விநியோகித்த அன்பளிப்புப் பைகள்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஜாலான் காயு வட்டாரத்தில் உள்ள 152 வசதி குறைந்த குடும்பங்களுக்குக் கிறிஸ்துமஸ் சிறப்பு லாக் கேக், உணவு, மளிகைப் பொருள்கள், பற்றுச்சீட்டுகள் அடங்கிய அன்பளிப்புப் பைகள் அண்மையில் வழங்கப்பட்டன. 

ஜாலான் காயு நல்லிணக்க வட்டம், அவ்வட்டாரத்தில் அமைந்துள்ள பிரசன்ன தேவாலயத்துடன் கைகோத்து இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

இதுகுறித்து தமிழ் முரசிடம் பேசிய பிர­சன்ன தேவா­ல­யத்­தின் செயல் தலைமை ஆயர் அருள்­திரு எடி­சன் நேச­கு­மார் வில்­சன், விழாக்காலம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்றார்.

“இயேசுவானவர் நன்மை செய்கிறவராகவே இருந்தார். அதைப்போலவே சமூகத்தில் உள்ள தேவையுள்ளோருக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று கருதினோம். 

“எனவே நல்லிணக்க வட்டத்துடன் இணைந்து, எளியோரை ஆசீர்வதிக்கும் வகையில் அன்பளிப்புப் பைகளைத் திருச்சபையாக வழங்கினோம்.  

“இறைவனின் அன்பை அனைவருடனும் பகிர்வதே அர்த்தமிகு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம். அவ்வகையில் திருச்சபை மக்களாக 152 குடும்பங்களுக்கும் ஆதரவளிக்கும் திட்டமாக இதைச் செயல்படுத்துகிறோம். இது சபையாகச் செய்யும் அன்பின் ஊழியம்,” என்று விவரித்தார் அருள்திரு எடிசன். 

இந்த அன்பளிப்பு பைகள் $100 மதிப்பிலானவை. அவற்றுள் $70 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள், $30 மதிப்பிலான உணவுப் பொருள்கள், கேக் ஆகியவை இடம்பெற்றன. 

“குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கிறிஸ்துமஸ் கேக்குகளில், 100 குடும்பங்களுக்கான கேக்குகள் ‘சீக்ரெட் ரெசிபி’ நிறுவன ஆதரவில் தயாரானவை. எஞ்சியுள்ள 52 குடும்பங்களுக்கு கேக் வழங்கும் நிதியுதவியை சபை மக்கள் அளித்தனர்,” என்று மேலும் தெரிவித்தார் அருள்திரு எடிசன்.

பிரசன்ன தேவாலய சபை மக்களிடம் அன்பளிப்புப் பைகள் வழங்குவது குறித்துத் தெரிவித்தபோது,  ஒரு குடும்பம் ஒரு பைக்கான ஆதரவை வழங்குவார்கள் என்று தாங்கள் நினைத்ததாகக் கூறினார் பிரசன்ன தேவாலய அங்கத்தினரும் நல்லிணக்க வட்டத்தில் சமய அமைப்பு பிரதிநிதியாகவும் இருக்கும் திரு ஆப்ரகாம் மணிமுத்து. 

“எனினும், எங்கள் சபையில் உள்ள சில குடும்பங்கள் 5, 10, 20  எனப் பல அன்பளிப்புப் பைகளுக்கான பொருளுதவியை வழங்க முன்வந்தனர்,’ என்றார் அவர். 

விழாவிற்கான ஒருங்கிணைப்புகள் குறித்துப் பேசிய ஜாலான் காயு நல்லிணக்க வட்டத்தின் தலைவர் முகம்மது பின் இஸ்மாயில், “நம் முன்னோடித் தலைவர்கள் பெற்றுத்தந்த இன, சமய நல்லிணக்கத்தைத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டுசேர்ப்பது நம் பொறுப்பு. 

“அவ்வகையில், பண்டிகைக் காலத்தில் யாரையும் விட்டுவிடாமல் எல்லோரையும் உள்ளடக்கிய வகையில் விழாக்காலம் திகழ்வது முக்கியம்,” என்றார்.

“எப்போதெல்லாம் இன, சமய அமைப்புகளுடன் இணைந்து செயலாற்ற வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தேவையுள்ளோர் யாரும் தனியே இல்லை என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம்,” என்று மேலும் கூறினார் திரு முகம்மது.

முன்னதாக ஷெங் சியோங் பேரங்காடிப் பற்றுச்சீட்டு, அரிசி உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அடங்கிய அன்பளிப்புப் பையைப் பெற்றுக்கொண்டவர்களுள் இல்லத்தரசி ஜெயந்தி காந்தியும் ஒருவர். 

’இந்த அன்பளிப்புப் பையில் குடும்பங்களுக்குத் தேவையான பொருள்கள் நிறைந்திருக்கின்றன. அதைப் பெற்றுக்கொண்ட பிறகு என் மனமும் நிறைந்திருக்கிறது,” என்றார் ஜெயந்தி.

குறிப்புச் சொற்கள்