மூழுவீச்சில் நடைபெற்ற பேரிடர் மீட்புப் பணி

சுற்றுப்பயணிகளை வரவேற்க இலங்கை தயார்: தூதரகம் உறுதி

2 mins read
fb89c948-72db-40df-816a-9f55fb795795
அண்மையில் இலங்கை எதிர்கொண்ட இயற்கைப் பேரிடருக்கு பிந்தைய நிலைமை, குறிப்பாக இலங்கையின் சுற்றுலாத் துறை நிலவரம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார் சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் செனரத் திசநாயக்க. (நடுவில்) - படம்: சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதரகம்.

பெருமழை, ‘டித்வா‘ சூறாவளி, நிலச்சரிவு என நவம்பரில் இயற்கைப் பேரிடரில் சிக்கி நிலைகுலைந்த இலங்கையில் அரசு மேற்கொண்ட தீவிர மீட்புப் பணியால் நாடு இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது என்றும் சுற்றுப்பயணிகளை வரவேற்க இலங்கை ஆயத்தமாக உள்ளது என்றும் சிங்கப்பூரில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் இலங்கை எதிர்கொண்ட மோசமான பருவமழை, பேரிடருக்குப் பிந்தைய நிலைமை, குறிப்பாக இலங்கையின் சுற்றுலாத் துறை நிலவரம் ஆகியவை குறித்து புதன்கிழமை (டிசம்பர் 17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிங்கப்பூருக்கான இலங்கைத் தூதர் செனரத் திசநாயக்க விவரித்தார்.

‘‘இலங்கையின் சுற்றுலாத் துறை தொடர்பில் நிலவும் கேள்விகள் குறித்து விளக்கமளிப்பதே இந்தச் சந்திப்பின் நோக்கம். குறிப்பாக, இலங்கைக்குச் செல்லும் சுற்றுப்பயணிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள், தங்குதடையின்று இயங்கும் போக்குவரத்துச் சேவைகள் ஆகியவை குறித்து தெளிவுபடுத்தவும் இலங்கையின் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் விழைகிறது,’’ என்றார் அவர்.

சுற்றுப்பயணிகளால் விரும்பப்படும் இலங்கையின் முக்கியச் சுற்றுலாப் பகுதிகள், ரயில் சேவைகள், அனைத்துலக வழித்தடங்கள் உள்ளிட்ட சாலை வசதிகள், கரையோர ரயில் சேவைகள், ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள் எனப் பெரும்பாலானவை வழக்கநிலைக்கு திரும்பிவிட்டதாக திரு திசநாயக்க தெரிவித்தார்.

இதற்கிடையே, பருவமழைக்காலம் இன்னும் முடிவடையாத நிலையில், கனமழை உள்ளிட எதிர்பாரா இடர்களைச் சந்திப்பதற்கான ஆயத்தம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இலங்கை சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் பதிலளித்தது.

சீரான நடவடிக்கைகள், உறுதியான கடப்பாட்டுடன், இலங்கையின் சுற்றுலாத் துறை மீள்திறன் வாய்ந்ததாகவும் தரமிக்க சேவைகளைக் கொண்டதாகவும் திகழ்கிறது என்றும் கழகம் குறிப்பிட்டது.

நெகோம்போ, அறுகம் குடா, பென்டோடா, ஏலா, திருக்கோணமலை உள்ளிட்ட பல முக்கியச் சுற்றுலா பகுதிகள் எப்போதும்போல இயங்குவதாகக் கழகத்தின் தலைவர் புத்திக்க ஹேவவசம் கூறினார்.

மேலும், இத்துறை சார்ந்த பங்காளிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலதரப்பினருடன் இணைந்து சுற்றுப்பயணிகளின் பாதுகாப்பு, தடையற்ற சேவைகள் என இலங்கைக்கு வருகை தருவோரின் நலத்தை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.

சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை, கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதைச் சுட்டிய கழகம், வருங்காலத்திலும் இந்த நிலை தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்