இவ்வாண்டு தீமிதித் திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீ மாரியம்மன் வீற்றிருக்கும் வெள்ளி ரதம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) மாலை 6 மணிவாக்கில் சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டது.
எவர்ட்டன் பார்க் பெவிலியன் மண்டபம், புளோக் 141, 142 ஜாலான் புக்கிட் மேரா, புளோக் 110 புக்கிட் பெர்மாய், புளோக் 29 தெலுக் பிளாங்கா ரைஸ் ஆகிய இடங்களில் நின்று பக்தர்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு, நள்ளிரவுவாக்கில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது.
சனிக்கிழமை (அக்டோபர் 11) அன்று, வெள்ளி ரதம் இரண்டாம் நாளாக மாலை 5 மணிக்கு ஸ்ரீ மாரியம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு, புளோக் 62 தெலுக் பிளாங்கா ஹைட்ஸ், டெப்போ ரோடு ஸ்ரீ ருத்ரகாளியம்மன் கோயில், புளோக் 28 ஹோய் ஃபாட் ரோடு, புளோக் 123 புக்கிட் மேரா வியூ ஆகிய இடங்களில் நின்று பக்தர்களின் காணிக்கைகளை ஏற்றுக்கொண்டு, நள்ளிரவுவாக்கில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலை வந்தடையும்.
எவர்ட்டன் பார்க்கில் தஞ்சோங் பகார் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ சசியாங் முதன்முறையாக வெள்ளி ரத ஊர்வலத்தில் பங்கேற்றார். அவருடைய துணைவியாரும் வந்திருந்தார்.
திரு சசியாங் அழகிய தமிழில் பேசி குடியிருப்பாளர்களைக் கவர்ந்தார். “இந்த ஊர்வலம் பண்பாடும் ஆன்மிகமும் இணைந்த நிகழ்ச்சி. இங்கு கொண்டாட்டங்களில் பங்கேற்க வந்திருப்பது எனக்குப் பெரும் கெளரவம். அனைத்து இனங்களையும் சமயங்களையும் சார்ந்த இத்தனை குடியிருப்பாளர்களைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சியடைகிறேன்,” என அவர் பாராட்டினார்.