தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

134 மாணவர்களுக்கு ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோவில் உதவி நிதி

3 mins read
926a85d8-c3c9-4d33-8e08-0802d08640e9
சிறப்பு விருந்தினருடன் உதவி நிதி பெற்ற மாணவர்களில் சிலர். - படம்: ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோவில்

தொடக்கநிலை, உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கக் கல்லூரி, பலதுறைத் தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம், பல்கலைக்கழக மாணவர்கள், சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் பலருக்கு ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோவில் கல்வி உதவி நிதி வழங்கியுள்ளது.

தொடர்ந்து 29 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்விழாவில், இந்த ஆண்டு 134 மாணவர்களுக்கு மொத்தம் $55,000 மதிப்பிலான உதவி நிதி வழங்கப்பட்டது.

ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோவில் வளாகத்தில் இம்மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் 55 மாணவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரேச்சல் ஓங் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் திருவாட்டி சரோஜினி பத்மநாதன் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தினார். பரதநாட்டியமும் மிருதங்க இசை நிகழ்ச்சியும் சிறப்புச் சேர்த்தன.

தனியார் துறையில் செயலாளராகப் பணியாற்றும் தம் ஒற்றைத் தாயாரின் சுமையை இந்த உதவி நிதி குறைக்கும் என நம்புவதாகக் கூறினார், தொழில்நுட்பக் கல்விக் கழக உயர் நைட்டெக் சான்றிதழ் மாணவர் பிரகலாதன் பாலகிருஷ்ணன், 24.

‘கிரோன்ஸ்’ (Crohns) எனும் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மருத்துவச் செலவு, குடும்பச் செலவு, அவருக்கும் அவரது சகோதரிக்கும் ஆகும் கல்விக்கும் செலவு அதிக நிதி தேவைப்படும் நிலையில் இந்த உதவி நிதி, தான் கல்வியில் கவனம் செலுத்த உதவும் என்றார் அவர்.

சிங்கப்பூர்ச் சமூக அறிவியல் பல்கலைக்கழக உயிர்மருத்துவத் துறை மாணவியான பவதாரிணி அசோகன், 21 படித்துக்கொண்டே மருந்தக உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.

“நான், என் மூத்த சகோதரர், இளைய சகோதரி, சிறப்புத் தேவையுடைய சகோதரர் என குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆகும் செலவுகளைச் சமாளிப்பது சிரமம். நிதிக் கவலையை சற்றே ஒதுக்கி வைத்து, கல்வியில் அதிகம் நேரம் செலவிட இது ஊக்குவிப்பாக அமைந்துள்ளது,” என்றார் அவர்.

கோமள விலாஸ் உணவகத்தில் சமையல் கலைஞராகப் பணியாற்றிவரும் தன் ஒற்றைத் தாயாரின் சிரமத்தை இந்த உபகாரச் சம்பளம் குறைக்கும் என்று சொன்னார் நிதித்துறை மாணவி த புவித்ரா.

இரண்டாம் முறையாக உதவி நிதியைப் பெற்றுள்ள அவர், “அண்மையில் எனது மடிக்கணினி செயலிழந்துவிட்டது. புதிதாக வாங்க அம்மாவிடம் பணம் கேட்பதற்குத் தயக்கமாக உள்ளது. தொடர்ந்து, இதே துறையில் மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன். அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் இந்த நிதி கைகொடுத்துள்ளது,” என்று கூறினார்.

“இந்த உதவி நிதி மாணவர்கள்மீது நாங்கள் செய்யும் முதலீடு,” என்றார் ஸ்ரீ ருத்ர காளியம்மன் கோவில் கௌரவச் செயலாளர் பார்த்திபன்.

“இந்த மாணவர்கள் வளர்ந்து நல்ல நிலைக்குச் சென்றபின் இதனை நினைவுகூர்வார்கள். தங்களுக்கு கிடைத்த உதவியைப் போலவே பிறருக்குக் கிடைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, தங்களால் இயன்றதைச் செய்ய முன்வருவார்கள். இது சங்கிலித் தொடராக சமூக மாற்றத்தை ஏற்படுத்தும்,” என்று திரு பார்த்திபன் கூறினார்.

மேலும், சிறப்புத் தேவை கொண்ட மாணவர்களுக்கும் அனைத்து இன மாணவர்களுக்கும் உதவி வழங்குவது அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் வெளிப்பாடு என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்