தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொய்த் தகவலை முறியடிக்க உதவும் புதிய மென்பொருள் வெளியீடு

2 mins read
31a40ec5-d295-40b7-a081-ce19f9a4793c
படம்: - இணையம்

சிங்கப்பூரில் வன்போலி (deepfake) செயற்கை நுண்ணறிவுப் (ஏஐ) பதிவுகளைக் கண்டறியும் புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

வன்போலிப் பதிவுகளைக் கண்டறியும் முதல் சில மென்பொருள்களில் இது அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலை முன்னிட்டு பொய்த் தகவல்கள் வெளியாவதைத் தடுக்க சிங்கப்பூர் எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.

இந்தப் புதிய மென்பொருளை சிங்கப்பூரின் எஸ்டி எஞ்சினியரிங் நிறுவனம் உருவாக்கியுள்ளது. வன்போலிப் பதிவைக் கண்டறியும் ‘ஐன்ஸ்டைன்.ஏஐ’ மென்பொருளை எஸ்டி எஞ்சினியரிங் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 3) மரினா பே சேண்ட்சில் வெளியிட்டது.

அந்நிறுவனம் ஆண்டுதோறும் நடத்திவரும் இனோடெக் மாநாட்டில் புதிய மென்பொருள் வெளியிடப்பட்டது.

பதிவேற்றம் செய்யப்படும் காணொளிகளில் உண்மைக்கு மாறான அசைவுகள் ஏதேனும் இருந்தால் அவற்றை ஐன்ஸ்டைன்.ஏஐ அடையாளம காணும். கணினியால் உருவாக்கப்படும் வினோதமான புருவம், மாறுபட்ட உதட்டு அசைவுகள் போன்றவற்றை அது அடையாளம் காணும் என்று எஸ்டி எஞ்சினியரிங் இணைத் தலைவர் டான் பூன் லியோங் தெரிவித்தார்.

வங்கிகள், முதலீட்டுத் தளங்கள், ஊடக நிறுவனங்கள் உள்ளிட்டவை அதனைப் பயன்படுத்தக்கூடும் என்றும் அவர் கூறினார்.

“இத்தகைய அம்சங்களை மனிதர்கள் அடையாளம் காண்பது என்பது தொடர்ந்து கடினமாகிக்கொண்டு வருகிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார். திரு டான், ஐன்ஸ்டைன்.ஏஐ மென்பொருளை உருவாக்குவதில் பணியாற்றியவர்.

ஊடாய்விற்குப் (Scanning) பிறகு ஐன்ஸ்டைன்.ஏஐ செயற்கை நுண்ணறிவு முறை, சம்பந்தப்பட்ட காணொளியில் ‘வன்போலி’ அம்சங்கள் இடம்பெற்றிருக்கக்கூடிய சாத்தியத்தைக் கணக்கிட்டு அறிக்கை ஒன்றைத் தயார்செய்யும். காணொளியில் இடம்பெறும் ஒலி பற்றிய தகவல்கள், காணொளி நம்பகமானதா என்பதை முதலீட்டாளர்களும் சமூக ஊடகப் பயனர்களும் உறுதிப்படுத்த உதவும் செய்திகள் போன்றவையும் அறிக்கையில் இருக்கும்.

மாநாட்டில் தொடக்க உரையாற்றிய பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான், வன்போலிப் பதிவுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஐன்ஸ்டைன்.ஏஐ போன்ற மென்பொருள்கள் முக்கிய முயற்சியாக அமைவதாகச் சொன்னார்.

2022ஆம் ஆண்டு பதிவானவற்றுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு வன்போலிப் பதிவுகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 500 விழுக்காடு அதிகரித்தது.

குறிப்புச் சொற்கள்