பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் செயின்ட் ஜோசஃப் தேவாலயம்

2 mins read
233b52ce-6820-4655-bbf3-d47fc012fa55
புக்கிட் தீமாவில் உள்ள செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் கடந்த நவம்பர் மாதம் பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்டார். - கோப்புப் படம்: சாவ்பாவ்

கடந்த நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதியன்று பாதிரியார் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு ஆளானதைத் தொடர்ந்து, செயின்ட் ஜோசஃப் தேவாலயம் அவசர நிலைகளைக் கையாள கூடுதல் தயார்நிலையில் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, மனநலன் தொடர்பில் முதலுதவி அளிக்கும் ஆற்றலை மேம்படுத்தி வருகிறது.

இறையன்பர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் தேவாலய அவசரநிலை ஆயத்தநிலை செயற்குழு (PEPT) அதன் நடைமுறைகளை வலுப்படுத்தவும் தனது குழுவை வளர்க்கவும் எண்ணம் கொண்டுள்ளதாக செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தின் ஆதரவுக் குழுக்களின் (pastoral teams) ஒருங்கிணைப்பாளர் ஜேன் லாவ் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தின் செயற்குழு 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அவசர சூழல்களில் உதவுவதற்கு முதலில் முன்வரும் பொறுப்பில் இருக்கும் தேவாலயத் தொண்டூழியர்கள் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

நவம்பர் ஒன்பதாம் தேதி நிகழ்ந்த தாக்குதலுக்குப் பிறகு தாங்களே முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறும் பாதுகாப்பை வலுப்படுத்துமாறும் சிங்கப்பூரின் ரோமன் கத்தோலிக்க தேவாலயக் குழுவில் இடம்பெறும் தேவாலயங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன. இதைத் தெரிவித்த சிங்கப்பூர் ரோமன் கத்தோலிக்க தேவாலயக் குழு, விழிப்புடன் இருக்குமாறு இறையன்பர்களைக் கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டது.

இம்மாதம் ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட அதன் செய்திமடலில், பாதுகாப்பு நடைமுறைகளையும் நடவடிக்கைகளையும் தாங்கள் வலுப்படுத்துவதாக செயின்ட் ஜோசஃப் தேவாலயம் தெரிவித்தது. குறிப்பாக, பரபரப்பாக இருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக் காலத்தில் அவ்வாறு செய்யப்படுவதாக தேவாலயம் குறிப்பிட்டது.

தனது தேவாலய அவசரநிலை ஆயத்தநிலை செயற்குழு உறுப்பினர்கள் ஒவ்வொரு கூட்டுப் பிரார்த்தனையிலும் இருப்பர் என்று அந்தத் தகவல் கையேட்டில் தெரிவிக்கப்பட்டது. சந்தேகத்துக்குரிய நடத்தை, கவனிக்கப்படாத பொருள்கள் போன்றவை கவனத்தை ஈர்த்தால் உடனடியாகத் தொண்டூழியர்களிடம் தெரியப்படுத்துமாறு செய்திமடல் வழியாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சிறிய, பெரிய பைகள் எதையும் தேவாலய வளாகத்தில் விட்டுச்செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்