தெமாசெக் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘எஸ்டி டெலிமீடியா’ நிறுவனம், மலேசியாவில் அண்மையில் ‘5ஜி’ ஒப்பந்தத்தைப் பெற்ற ‘யு மொபைல்’ நிறுவனத்தில் முதலீட்டைக் குறைக்கவிருக்கிறது.
‘யு மொபைல்’ பங்குகளில் ஒரு பகுதியை, மலேசியத் தொழிலதிபர் வின்சென்ட் டானும் மாமன்னரின் மகளும் நிர்வகிக்கும் ‘மவார் சேடியா’ நிறுவனத்துக்கு விற்க அது திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் தொடர்பில் புதன்கிழமை (டிசம்பர் 4) இணக்கம் காணப்பட்டது.
‘எஸ்டி டெலிமீடியா’வின் முதலீட்டுப் பிரிவு, ‘யு மொபைல்’ நிறுவனத்தில் தற்போது 48 விழுக்காட்டுப் பங்குகளை வைத்துள்ளது. இனி அது 20 விழுக்காடாகக் குறைக்கப்படும்.
‘மவார் சேடியா’ நிறுவனத்துக்கு 70:30 என்ற அடிப்படையில் முறையே திரு டானும் ஜோகூர் இளவரசியார் அமினா இப்ராஹிமும் உரிமையாளர்கள்.
‘யு மொபைல்’ நிறுவனத்தைத் தோற்றுவித்த திரு டான் அதன் தலைவராகச் செயல்படுகிறார்.
கடந்த நவம்பர் மாதம் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் அரசாங்கம், நாட்டின் இரண்டாவது ஐந்தாம் தலைமுறைத் தொலைத்தொடர்புக் கட்டமைப்பை (5ஜி) உருவாக்குவதற்கான ஏலக்குத்தகையை ‘யு மொபைல்’ நிறுவனத்துக்கு வழங்கியது. அதையடுத்து ‘எஸ்டி டெலிமீடியா’வின் பங்கு விற்பனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பங்குகளை விற்பதற்கு கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் தேவை. அடுத்த ஆண்டின் (2025) மூன்றாம் காலாண்டில் அது நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து மாமன்னரின் அரண்மனை, மலேசியத் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்ஸில், திரு வின்சென்ட் டான் ஆகிய தரப்புகள் கருத்துரைக்கவில்லை.