சிங்கப்பூரில் 1990ஆம் ஆண்டில் இங் குவாங் கெங் என்னும் ஆடவர் கத்தியால் ஒருவரைத் தாக்கிவிட்டுத் தலைமறைவானார்.
கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாகச் சட்டத்தை ஏமாற்றித் தலைமறைவாக வாழ்ந்து வந்த 80 வயது குவாங்கிற்குத் தற்போது ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்தபோது கடன் முதலையாகக் குவாங் செயல்பட்டார். அப்போது அவருக்கு வயது 47.
1990ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் தேதி, 22,000 வெள்ளி கடனைத் திருப்பிக் கொடுக்காத லிம் கிம் லெங் என்னும் 27 வயது ஆடவரை குவாங் கத்தியால் தாக்கினார். அதன்பின்னர் குவாங் தலைமறைவானார்.
பலத்த காயம் காரணமாக லிம் சில வாரங்களில் உயிரிழந்தார்.
குவாங் 2022ஆம் ஆண்டு குடிநுழைவு குற்றத்திற்காக மலேசியாவில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் 2023ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டார்.
அதன்பின்னர் குவாங்மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையின் முடிவில் ஒருவரை வேண்டுமென்றே அபாயகரமாகத் தாக்கியதற்காகக் குவாங்கிற்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

