மூத்த குடிமக்களுக்கு மின்னிலக்க மோசடிக் காப்புறுதி வழங்கும் ஸ்டான்சார்ட் வங்கி

2 mins read
8f7443f6-6e53-4bb3-b446-41ee79756693
‘மைவே’ சேமிப்புக் கணக்கிற்கான வட்டி விகிதங்களையும் ஸ்டான்சார்ட் வங்கி உயர்த்தியுள்ளது. - கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ்

மின்னிலக்க மோசடிக் காப்புறுதி, கூடுதல் வட்டி விகிதங்கள் வழங்கும் வகையில் தனது ‘மைவே’ சேமிப்புக் கணக்கை மறுசீரமைத்து இருப்பதாக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி அறிவித்துள்ளது.

‘மைவே’ சேமிப்புக் கணக்கு 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுப் பிரிவினருக்கானது.

‘எம்ஐஎஸ்ஜி’ நிறுவனத்தின்மூலம் வழங்கப்படும் மின்னிலக்க மோசடிக் காப்புறுதித் திட்டமானது, தீங்குநிரல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அதிகாரத்துவமற்ற பணப் பரிவர்த்தனைகளிலிருந்து $50,000 வரையிலான தொகையைப் பாதுகாக்கும்.

அதே நேரத்தில், காதல் மோசடி, முதலீட்டு மோசடி, ஆள்மாறாட்ட மோசடி போன்றவற்றை அந்தக் காப்புறுதித் திட்டம் உள்ளடக்காது.

புதிது புதிதாகக் கிளம்பும் மின்னிலக்க மோசடிகளால் மூத்த குடிமக்கள் எளிதில் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில், மின்னிலக்க மோசடிக் காப்புறுதியுடன் கூடிய சேமிப்புக் கணக்கானது, வாடிக்கையாளர்களுக்கு மன நிம்மதியையும் அதே நேரத்தில் நிதி வளர்ச்சியையும் வழங்கும் என்று நமபுவதாக ஸ்டான்சார்ட் வங்கி தெரிவித்துள்ளது.

முதலாம் ஆண்டில் மின்னிலக்க மோசடிக் காப்புறுதித் திட்டம் இலவசமாக வழங்கப்படும்.

இதனிடையே, ‘மைவே’ சேமிப்புக் கணக்கிற்கான வட்டி விகிதங்களையும் ஸ்டான்சார்ட் வங்கி உயர்த்தி இருக்கிறது.

அதன்படி, அக்கணக்கிலுள்ள முதலாவது 50,000 வெள்ளிக்கான வட்டி ஆண்டுக்கு 0.05 விழுக்காடு என்ற விகிதத்திலேயே தொடரும்.

அதனை அடுத்துள்ள 200,000 வெள்ளிக்கு 0.5 விழுக்காடும் அடுத்த 1.25 மில்லியன் வெள்ளிக்கு ஒரு விழுக்காடு வட்டியும் வழங்கப்படும். அடுத்த 3.5 மில்லியன் வெள்ளிக்கு அதிகபட்சமாக 3 விழுக்காடு வட்டி வழங்கப்படும்.

இந்த வட்டி விகித மாற்றங்கள் திங்கட்கிழமை (மார்ச் 17) முதல் நடப்பிற்கு வருகின்றன,

குறிப்புச் சொற்கள்