இணையம்வழி ‘ஏர்பாட்ஸ்’ வாங்கிய வாடிக்கையாளருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

இணையம்வழி ‘ஏர்பாட்ஸ்’ வாங்கிய வாடிக்கையாளருக்குக் காத்திருந்த அதிர்ச்சி

படம்: momo043522/டிக்டாக்

22 Oct 2026 - 7:01 pm

2 mins read

ஷாப்பி தளத்தில் ‘ஏர்பாட்' செவிப்பொறி வாங்கிய வாடிக்கையாளருக்கு, அதற்குப் பதிலாக தைப்புமுட்கள் (staples) அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ‘மோமோ043522’ என்ற டிக்டாக் பயனர் வெளியிட்ட பதிவில், அங்கீகரிக்கப்பட்ட ஆப்பிள் கருவிகள் மறுவிற்பனையாளராகக் கூறிக்கொள்ளும் ஷாப்பி மாலின் ‘ஆப்பிள் ஃபிளாக்‌ஷிப் ஸ்டோரிடமிருந்து’ தாம் செவிப்பொறிக்குப் பணம் செலுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த விற்பனையாளர்க்கு 186,000 பின்தொடர்பாளர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹூ என அடையாளம் காணப்பட்ட அந்த வாடிக்கையாளர், அக்டோபர் 17ஆம் தேதியன்று இரவு 8:23 மணிக்கு ஷாப்பியின் தள்ளுபடிப் பற்றுச்சீட்டுகள், ஷாப்பி நாணயங்களைப் பயன்படுத்தி, $254 விலையில் அந்தச் செவிப்பொறிகளை வாங்கினார்.

ஷாப்பி தளத்தில் ஏர்பாட்ஸ் புரோ 3ன் உண்மையான விலை $349 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், 9 விழுக்காடு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஆப்பிளின் அதிகாரபூர்வ இணையத்ளத்திலும் அதன் விலை $349 ஆகும். மேலும், ஷாப்பி தளத்தில் 9,000க்கும் மேற்பட்ட நேர்மறை விமர்சனங்களுடன் 4.9 நட்சத்திர மதிப்பீட்டையும், 100 விழுக்காடு உண்மையானது என்ற சான்றையும் இந்தத் தயாரிப்பு பெற்றுள்ளது.

ஆனால், வீட்டிற்கே நேரடியாக விநியோகிக்கப்பட்ட பெட்டியைத் திறந்து பார்த்தபோது, உள்ளே ஏர்பாட்சுக்குப் பதிலாக தைப்புமுட்கள் மட்டுமே இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

அதுகுறித்து ஷாப்பியின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவை ஹூ உடனடியாகத் தொடர்புகொண்டார். விசாரணைக் காரணங்களுக்காக ஏர்பாட்சின் வரிசை எண்ணைக் கேட்டறிந்த விற்பனையாளர், பொருளைத் திருப்பி அனுப்பி, பணத்தைத் திரும்பப் பெறுமாறு அவருக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, அக்டோபர் 19ஆம் தேதியன்று ஹூ அந்தப் பொருளைத் திருப்பி அனுப்பினார். அன்றே அவருக்கு முழுத் தொகையும் திரும்ப வழங்கப்பட்டது. பொருளைப் பெற்றுக்கொள்வதற்கு முன்பே விற்பனையாளர் பணத்தைத் திருப்பித் தந்ததை அறிந்து வியப்படைந்ததாகக் கூறிய ஹூ, இருப்பினும் நடந்த சம்பவம் மிகவும் வினோதமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்