தீமிதித் திருவிழாவின் தொடக்கமாக சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5ஆம் தேதி) மாலை கொடியேற்றம் இடம்பெற்றது. இவ்வாண்டு அக்டோபர் 20ஆம் தேதி நடைபெறவிருக்கும் தீமிதித் திருவிழாவை முன்னிட்டு மூன்று மாதங்கள் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கொடியேற்றம் குறிப்பிடத்தக்க தொடக்கமாகத் திகழ்கிறது.
ஏராளமான பக்தர்கள் கூடியிருந்த நிலையில் மாலை ஐந்து மணியளவில் ஆலயத்தின் தலைமைப் பண்டாரம் வேணுகோபால் திருநாவுக்கரசு கொடியேற்று விழாவிற்கு நடைபெறும் முந்தைய சடங்கில் கரகத்தை சுமந்துகொண்டு ஆலயத்தைச் சுற்றி ஆடி வந்தார்.
அதையெடுத்து வாஸ்து சாந்தி, புண்யாஹவாசனம் ஆகிய வழிபாடுகள் இடம்பெற்றன. இரவு 9.30 மணிக்குள் ஆஞ்சநேயர் உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்ட காட்சி முத்தாய்ப்பாக அமைந்தது.
இதைத்தொடர்ந்து தீமிதித் திருவிழா வரை நடக்கவிருக்கும், அர்ஜுனன் தபசு, அரவான் களப்பலி, மகாபாரதக் கதைகளை ஏற்று நடிக்கும் அங்கங்கள் போன்றவை ஆடி மாதம் தொடங்கி மூன்று மாதங்களுக்கு நீடிக்கும்.
தீமிதித் திருவிழாவின் முதல் நிகழ்வாக பத்ரகாளியின் மறுவடிவம் என்று கூறப்படும் பெரியாச்சி அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்தப்பட்டது. கொடியேற்று விழாவை நேரடியாகக் காண இயலாத பக்தர்கள் நேரடி ஒளிபரப்பு மூலம் பூஜைகளில் கலந்துகொண்டனர்.
“ஆலயத்தின் தொண்டூழியர்கள் இந்த விழாவுக்கு முக்கிய தூண்களாக இருந்தனர். கொடியேற்றத்திற்குக் கரகம் தயாரிப்பது, கொடியைத் தயாரிப்பது என 200லிருந்து 300 வரையிலான தொண்டூழியர்களின் கரங்கள் தேவைப்பட்டன. இனி நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள் தொடர்பான மேல் விவரங்களுக்கு பக்தர்கள் இந்து அறக்கட்டளை வாரியத்தின் இணையத்தளத்தை நாடலாம்,” என்று ஆலய நிர்வாகக் குழுச் செயலாளர் அண்ணாமலை சரவணன், 48, சொன்னார்.
“கடந்த 15 ஆண்டுகளாக நான் ஆலய தொண்டூழியராக உள்ளேன். நான் கரகம் தயாரிப்பதில் முழுமூச்சாக ஈடுபட்டேன்,” என்று தொண்டூழியர் தினேஷ்குமார், 39, தெரிவித்தார்.
“கொடியேற்று திருவிழாவில் கொடியேற்றும் குழுவில் நான் உள்ளேன். ஆலயத்தில் தொண்டூழியத்தில் ஈடுபடும்போது எனக்கு மனநிறைவு கிடைக்கிறது,” என்று தொண்டூழியர் கே. சக்திவேலா, 35, கூறினார்.