2027 ஜனவரி முதல், ‘இஆர்பி 2’ ‘ஓபியு’ கருவியின் தரவுகள் குற்றங்களைத் தடுக்கப் பயன்படுத்தப்படலாம்

2027 ஜனவரி முதல், ‘இஆர்பி 2’ ‘ஓபியு’ கருவியின் தரவுகள் குற்றங்களைத் தடுக்கப் பயன்படுத்தப்படலாம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

03 Nov 2026 - 6:27 pm

2 mins read

2027ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து, அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண (இஆர்பி) அமைப்பின் வாகனக் கருவிகளில் (ஓபியு) சேமிக்கப்படும் தகவல்கள், குற்றங்களைத் தடுக்கவும், கண்டறியவும், துப்புத்துலக்கவும் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 3) நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சின் மூத்த துணை அமைச்சர் கோ பெய் மிங், குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில், அதிகாரிகளுக்குக் கிடைக்கக்கூடிய புலனாய்வு, விசாரணைக்கான கருவிகளில் ஒன்றாக இந்த ‘இஆர்பி 2’, ‘ஓபியு’ தரவுகள் இருக்கும் என்று தெரிவித்தார்.

ஜாக்சன் லாம் (நீ சூன் குழுத்தொகுதி) எழுப்பிய கேள்விக்குத் திரு கோ பதிலளித்தார். ‘இஆர்பி 2’ அமைப்பைச் சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த முடியுமா என்றும் இத்தகைய அணுகலைக் கட்டுப்படுத்த என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கேட்டிருந்தார்.

‘இஆர்பி 2’ அமைப்பானது, கட்டணம் வசூலிப்பதற்காக வாகனங்களின் இருப்பிடத்தைக் கண்டறிய, வாகன நுழைவாயில்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகச் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களிலும், 2027ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல், அடுத்த தலைமுறை ‘ஓபியு’ கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

உள்துறைக் குழு பயன்படுத்தும் பிற தரவுகளைப் போலவே, ‘இஆர்பி 2’ தரவுகளை அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் இருக்கும் என்று திரு கோ தெரிவித்தார்.

வாகனங்களுக்கென பிரத்தியேகமான, ஓபியு கருவிகளிலிருந்து பெறப்படும் தரவுகளை எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும் என்றும் திரு லாம் வினவினார்.

குற்றவியல் விசாரணைகளை அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளை முடிப்பதற்குத் தேவையான காலம் வரை மட்டுமே காவல்துறையினர் அந்தத் தரவுகளைத் தங்களின் வசம் வைத்திருப்பார்கள் என்று திரு கோ தெரிவித்தார்.

‘இஆர்பி 2’ தரவுகளைச் சட்ட அமலாக்க அமைப்புகள் அணுகுவதும் பயன்படுத்துவதும், மற்ற அனைத்து உணர் கருவிகள் அல்லது தகவல் மூலங்களுக்கும் பொருந்தக்கூடிய அதே சட்ட, தரவு நிர்வாகப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு உட்பட்டே இருக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

நிலப் போக்குவரத்து ஆணையம் செப்டம்பர் மாதம் தெரிவித்த தகவலின்படி, புதிய இஆர்பி அமைப்பு, எல்லை தாண்டிய சட்டவிரோதமான வாடகை கார் சேவைகள் போன்ற வாகனங்கள் தொடர்பான குற்றங்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

‘இஆர்பி 2’ அமைப்பை வாகனங்களின் வேக வரம்பு மீறல்களைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்த முடியும் என்றாலும் அவ்வாறு பயன்படுத்துவதற்கு முன்னதாக அதில் கூடுதல் தொழில்நுட்ப மேம்பாடுகள் தேவைப்படும் என்று அப்போது ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்
நிலப் போக்குவரத்து ஆணையம்இஆர்பிதரவு