தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுற்றுப்பயணிகளைப் பேருந்து ஓட்டுநர் கைவிட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை

2 mins read
ed3eb7ac-1260-4ea1-aa56-3bd80e4c86b2
சுற்றுப்பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பேருந்து ஓட்டுநர். - படம்: ஷின் மின்

நினைவுப் பொருள்கள் வாங்குவதன் தொடர்பிலான வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ரேஸ் கோர்ஸ் சாலையில் சுற்றுலாப் பேருந்து ஓட்டுநரால் சுற்றுப்பயணிகள் கைவிடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.

ஆகஸ்ட் 16ஆம் தேதி நண்பகல் வாக்கில் நடந்ததாகச் சொல்லப்படும் இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய சிங்கப்பூரில் உள்ள சீனத் தூதரகம், பாதிக்கப்பட்ட சுற்றுப்பயணிகளை அழைத்துவர கார் ஒன்றை தான் அனுப்பியதாகத் தெரிவித்தது.

உள்ளூர் பயண முகவை ஒன்றைச் சேர்ந்த சுற்றுலாப் பேருந்து ஓட்டுநர் ஒருவருடன் சீனப் பயணிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வலம் வந்தது.

அந்த ஓட்டுநர் விற்ற நினைவுப் பொருள்களை தாங்கள் வாங்காததால் அவர் தங்களை அவமதித்ததாக அப்பயணிகள் கூறினர்.

பேருந்திலிருந்து தங்களது பயணப்பெட்டிகளை அந்த ஓட்டுநர் வெளியேற்றியதாகவும் தமது செயலுக்கு அவர் மன்னிப்பும் கோரவில்லை எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கருத்துரைத்த சிங்கப்பூர் பயணத்துறை வாரியப் பேச்சாளர் ஒருவர், “சிங்கப்பூரில் உள்ள பயண முகவர்களின் ஒழுங்குமுறையாளராக, உரிமம்பெற்ற அனைவரும் தங்களது கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.

“சுற்றுப்பயணிகளை அவமதிக்கும் அல்லது ஆபத்தில் விடும் எந்தவொரு செயலையும் சிங்கப்பூர் பயணத்துறை வாரியம் சகித்துக்கொள்ளாது. தரக்குறைவான சுற்றுப்பயண செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆணையம் தயங்காது,” என்று விவரித்தார்.

பாதிக்கப்பட்ட சீனப் பயணிகள் திட்டமிட்டபடி அடுத்த நாள் மலேசியாவுக்குப் புறப்பட்டதாகவும் ஆகஸ்ட் 19ஆம் தேதி அவர்கள் சீனா திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்