ஸ்டீவன்ஸ் சாலையில் வியாழக்கிழமை (மே 15) விபத்து ஏற்பட்டது.
காரும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகின.
இந்நிலையில், விபத்துக்குள்ளான காரை ஓட்டிய 44 வயது ஆடவர் விசாரணையில் உதவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டீவன்ஸ் சாலைக்கும் டிரேகாட் பார்க்கிற்கும் இடையிலுள்ள சாலைச் சந்திப்பில் நிகழ்ந்த விபத்து குறித்து மாலை 6.40 மணி அளவில் தகவல் கிடைத்தது என சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
விபத்தில் சிக்கிய 58 வயது மோட்டார் சைக்கிளோட்டி சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது அவர் சுயநினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்தைக் காட்டும் காணொளி எஸ்ஜி ரோடு விஜிலேண்ட்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
ஸ்டீவன்ஸ் சாலையில், தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் வழியில் இரண்டு கார்கள் சாலையில் உள்ள மஞ்சள் கட்டத்துக்கு முன்பு நின்றன.
தொடர்புடைய செய்திகள்
அவை அந்த மூன்று தடங்களைக் கொண்டு சாலையின் நடு, வலது தடங்களில் இருந்தன.
எதிர்த் திசையிலிருந்து வந்த வெள்ளி நிற கார், சாலையில் உள்ள மஞ்சள் கட்டத்தைப் பயன்படுத்தி டிரேகாட் பார்க்கை நோக்கி வலது பக்கம் திரும்பியது.
அப்போது, ஸ்டீவன்ஸ் சாலையின் இடது தடத்திலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் நின்றுகொண்டிருந்த கார்களில் ஒன்றைக் கடந்து சென்றது.
வெள்ளி நிற காரின் இடது பின் கதவு மீது அது மோதியது.

