தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சிகரெட் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை: பிரதமர் வோங்

2 mins read
064ac38f-076b-40f5-8615-6cc36f1d6984
மின்சிகரெட் பயன்பாட்டிற்கு எதிராக சிங்கப்பூரில் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மின்சிகரெட் பயன்பாட்டிற்கு எதிராக சிங்கப்பூரில் மேலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமது தேசிய தினப் பேரணி உரையின்போது பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

இதுவரை மின்சிகரெட்டுகள் பயன்படுத்தியவர்களுக்கு, புகையிலைக்கான தண்டனை போலவே அதிகபட்சமாக அபராதம் விதித்து வந்துள்ளோம் என்று குறிப்பிட்ட பிரதமர், இனி அது மட்டும் போதாது என்று கூறினார்.

“இனிமேல் இதை ஒரு போதைப்பொருள் பிரச்சினையாகக் கருதி, மிகக் கடுமையான தண்டனைகளை விதிப்போம்,” என்றார் அவர்.

தீங்கு விளைவிக்கும் பொருள்கள் உள்ள மின்சிகரெட்டுகளை விற்பவர்களுக்கு சிறைத்தண்டனையும் மேலும் கடுமையான தண்டனைகளும் விதிக்கப்படும்.

மின்சிகரெட் புகைத்தலுக்கு அடிமையாகியுள்ளோருக்கு, புகைப்பழக்கத்தை நிறுத்த உதவும் வகையில் மேற்பார்வை, மறுவாழ்வு வசதிகளை அரசாங்கம் வழங்கும் என்றும் திரு வோங் கூறினார்.

“தேசிய அளவில் அமலாக்க நடவடிக்கைகளை நாங்கள் தீவிரப்படுத்துவோம். மின்சிகரெட் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முக்கிய பொதுக் கல்வி இயக்கத்தைத் பள்ளிகளிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும், தேசிய சேவையின்போதும் தொடங்குவோம்,” என்றார் பிரதமர்.

உள்துறை அமைச்சும் சுகாதார அமைச்சும் இணைந்து இம்முயற்சிகளை முன்னெடுக்கும் அதே நேரத்தில், முழு அரசாங்கமும் ஒருங்கிணைந்து இதில் ஈடுபடும் என்று அவர் கூறினார்.

இதுகுறித்த விவரங்களை அமைச்சுகள் பின்னர் வெளியிடும்.

Watch on YouTube

மின்சிகரெட்டுகளின் பயன்பாட்டிற்கு எதிராக சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் அவற்றை இறக்குமதி செய்து, சட்டங்களிலிருந்து தப்பிக்கும் வழிகளை மக்கள் தொடர்ந்து கண்டுபிடித்து வருவதாக பிரதமர் சொன்னார்.

எட்டோமிடேட் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருள்கள் மின்சிகரெட்டுகளில் உள்ளதை சுட்டிய அவர், எதிர்காலத்தில் அதைவிட ஆபத்தான போதைப்பொருள்கள் பயன்படுத்தப்படலாம் என எச்சரித்தார்.

“இன்று, இளம் சிங்கப்பூரர்களுக்கு முன்பைவிட அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆனால், அவர்கள் மிகவும் வித்தியாசமான, சிக்கலான சவால்களையும் எதிர்கொள்கின்றனர்,” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு தலைமுறையும் தங்கள் குழந்தைகளைப் பாதிக்கக்கூடிய எதிர்மறை தாக்கங்களைப் பற்றிக் கவலைப்படுவதுண்டு. இதைக் கூறிய பிரதமர், சில சமயங்களில் இந்தக் கவலை நேர்மைறையான காரணங்களுக்காக இருந்தாலும் மற்ற சில நேரங்களில் அது மிகையானதாகவும் இருக்கலாம் என்று சொன்னார்.

1950களிலும் 1960களிலும் ‘காமிக்’ புத்தகங்கள் ஒரு தீய தாக்கத்தை ஏற்படுத்துவையாக கருதப்பட்டன. அதேப் போலவே, தவறான வாழ்க்கைமுறையை ஊக்குவிப்பதாக கருதப்பட்ட மேற்கத்திய ‘ராக்’ இசையும் எதிர்க்கப்பட்டது.

இக்கட்டுப்பாடுகள் பின்னர் படிப்படியாக தளர்த்தப்பட்டதைக் குறிப்பிட்ட பிரதமர், தாமும் தமது சகாக்களும் ‘காமிக்ஸ்’, ‘ராக்’ இசை இரண்டிலும் ஈடுபட்டு வளர்ந்ததாகவும் தற்போது அனைவரும் நலமாகவே இருப்பதாகவும் கூறினார்.

“இன்று யாரும் இவற்றைத் தீங்கு விளைவிப்பதாகக் கருத மாட்டார்கள். ஆனால், காலப்போக்கில் புதிய அபாயங்கள் தோன்றியுள்ளன. அவற்றில் சில உண்மையிலேயே கவலைக்குரியவையாகும்.

“குறிப்பாக, மின்சிகரெட் புகைத்தல் ஒரு கடுமையான கவலையாக மாறியுள்ளது,” என்றார் பிரதமர் வோங்.

குறிப்புச் சொற்கள்