எதிர்காலத் தலைமுறையினர் அறியவேண்டிய நம் மூத்தோரின் கதைகள்

எதிர்காலத் தலைமுறையினர் அறியவேண்டிய நம் மூத்தோரின் கதைகள்

3 mins read
6d007e23-6ca1-4ae1-a5bb-2cc50d674f32
1950கள் முதல் 1980கள் வரையிலான காலகட்டத்தில் தங்களது அனுபவங்களையும் கதைகளையும் முன்னோர்கள் பகிர்ந்துகொண்டனர். - படம்: த. கவி

கடந்த 1950கள் முதல் 1970கள் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் வளர்ச்சியிலும் கட்டமைப்புப் பணிகளிலும் நேரடியாகப் பங்கேற்று வாழ்ந்த மூத்த தலைமுறையினரின் அனுபவங்களைப் பதிவுசெய்ய நிறுவியோர் நினைவக மூத்தோர் ஈடுபாட்டுத் திட்டம் என்ற நிகழ்ச்சி உதவியது.

தமிழ் முரசு நாளிதழ், தேசிய மரபுடைமைக் கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி, நிறுவியோர் நினைவகத்தின் ‘குடிமக்கள் திட்டப்பணி - ஒரு மில்லியன்’ (Founders’ Memorial Citizen Programme) இயக்கத்திற்கு ஆதரவாக நடத்தப்பட்டது.

சனிக்கிழமை (செப்டம்பர் 12) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கல்சா சங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் மூத்த உறுப்பினர்களை ஒன்றுதிரட்டியது.

நாடு கட்டமைக்கப்பட்ட காலத்தில் மூத்த தலைமுறையினர் எதிர்கொண்ட சவால்கள், வெற்றிகள், அன்றாட வாழ்க்கைப் பதிவுகளை ஆவணப்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, ஊடகத்துறையில் நெடுநாள் அனுபவம் கொண்ட திரு செ.ப.பன்னீர்செல்வமும் திரு முகமது அலியும் பங்கேற்ற சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. சிங்கப்பூரின் தொடக்ககால வளர்ச்சி, ஊடகத் துறையின் பங்கு, நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்கள், நினைவுகள் போன்றவற்றை இருவரும் பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், ஊடகத்துறையில் நெடுநாள் அனுபவம் கொண்ட திரு செ.ப.பன்னீர்செல்வமும் (மேடையில் இடது)  திரு முகமது அலியும் பங்கேற்ற சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஊடகத்துறையில் நெடுநாள் அனுபவம் கொண்ட திரு செ.ப.பன்னீர்செல்வமும் (மேடையில் இடது) திரு முகமது அலியும் பங்கேற்ற சிறப்புக் கலந்துரையாடல் நடைபெற்றது. - படம்: த.கவி

பேச்சாளர்கள் இருவரும் அவர்களது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வேளையில், பங்கேற்பாளர்கள் ஆர்வத்தோடு பதிலளித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

சிங்கப்பூரின் தொடக்ககால வளர்ச்சி, ஊடகத் துறையின் பங்கு, நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்கள், நினைவுகள் போன்றவற்றைத் திரு செ.ப.பன்னீர்செல்வம், திரு முகமது அலி (மேடையில் வலது) இருவரும் பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
சிங்கப்பூரின் தொடக்ககால வளர்ச்சி, ஊடகத் துறையின் பங்கு, நாடு சுதந்திரம் பெற்ற காலத்தில் தாங்கள் பெற்ற அனுபவங்கள், நினைவுகள் போன்றவற்றைத் திரு செ.ப.பன்னீர்செல்வம், திரு முகமது அலி (மேடையில் வலது) இருவரும் பங்கேற்பாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர். - படம்: த.கவி

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த குடிமக்கள் தங்கள் நினைவுகளையும் அனுபவங்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பள்ளி, வேலை, சமூகம், நாட்டின் சுதந்திரத்தால் ஏற்பட்ட வாழ்க்கை மாற்றங்கள் தொடர்பான தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அவர்கள் தங்களின் கதைகளை எழுதினர்.

கடந்தகால, நிகழ்காலச் சிங்கப்பூர் குறித்த நினைவுகளை அடிப்படையாகக் கொண்டு அஞ்சல் அட்டைகளை அலங்கரித்ததுடன், வருங்காலச் சந்ததியினருக்குக் கடத்த விரும்பும் செய்திகளையும் அவர்கள் அதில் எழுதினர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த குடிமக்கள் தங்கள் நினைவுகளையும் அனுபவங்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மூத்த குடிமக்கள் தங்கள் நினைவுகளையும் அனுபவங்களையும் பதிவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். - படம்: த.கவி
வருங்காலச் சந்ததியினருக்குக் கடத்த விரும்பும் செய்திகளை அவர்கள் எழுதினர்.
வருங்காலச் சந்ததியினருக்குக் கடத்த விரும்பும் செய்திகளை அவர்கள் எழுதினர். - படம்: த.கவி

பங்கேற்பாளர்கள் எழுதிய கதைகள், அஞ்சல் அட்டைச் செய்திகள் அவர்களின் சொந்தக் குரலிலேயே ஒலிப்பதிவு செய்யப்பட்டன. ஆவணப் பதிவிற்காக அவர்களின் புகைப்படங்களும் எடுக்கப்பட்டன.

இன்றைய நிகழ்ச்சியில் சேகரிக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுகள், 2028ல் நிறுவியோர் நினைவகம் திறக்கப்படும்போது அதன் கண்காட்சிகள், மின்னிலக்க ஆவணக் காப்பகங்களில் இடம்பெறக்கூடும்.

“பல நாள்களுக்குப் பிறகு, பழைய அனுபவங்களை நினைவுகூர்ந்து அவற்றை அடுத்த தலைமுறையினர்க்காகப் பகிர்ந்துகொள்வது நெகிழ்ச்சியாக இருந்தது,” என்றார் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளங்கோவன் குமுதவல்லி, 77.

தொடர்ந்து குடும்பத்தைப் பராமரிப்பதிலேயே நேரத்தைச் செலவிட்டு வரும் முதியவர்களுக்கு இந்நிகழ்ச்சி மனத்திற்கு அமைதியையும் புத்துணர்ச்சியையும் தந்ததாக 65 வயது ஃப்லோரன்ஸ் ஆன்டனி கூறினார்.

“நமது பாரம்பரியத்தையும் அனுபவங்களையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறோம் என்ற எண்ணம் மிகுந்த மனநிறைவை அளிக்கிறது, “ என்றும் அவர் குறிப்பிட்டார்.

பழைய நண்பர்களைச் சந்திக்கவில்லை என்றாலும் புதிய நட்புகளை உருவாக்க இந்நிகழ்ச்சி உதவியது என்றும் தன்னைவிட மூத்தவர்கள் பலரைச் சந்தித்து அவர்களது அனுபவங்களைக் கேட்டறிய முடிந்தது என்றும் ரா. தனபால், 74, பகிர்ந்துகொண்டார்.

வரும் 2028ஆம் ஆண்டில் திறக்கப்படவிருக்கும் புதிய கலைக்கூடமாகவும் தோட்ட அனுபவமாகவும் அமையவிருக்கும் நிறுவியோர் நினைவகம் சிங்கப்பூரர்களுக்காக, சிங்கப்பூரர்களால் உருவாக்கப்படும் ஒரு நினைவிடமாக உருவெடுத்து வருகிறது. இது சுதந்திர சிங்கப்பூரின் வரலாற்றை, குறிப்பாக 1950கள் முதல் 1970கள் வரையிலான காலகட்டத்தைப் படம்பிடித்துக் காட்டும்.

சிங்கப்பூரின் முதல் தலைமுறை மூத்த குடிமக்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க கதைகள் நிறுவியோர் நினைவகத்தால் வழங்கப்படுகின்றன. இது குறித்த கூடுதல் விவரங்களை அறியவும் ஆதரவு அளிக்கவும் www.foundersmemorial.gov.sg என்ற இணையத்தளத்தை நாடலாம்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்