நல்லாசிரியர் விருது 2019: நியமனங்களைச் சமர்ப்பிக்கலாம்

இவ்வாண்டின் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியுள்ள தமிழ் ஆசிரியர்களைப் பரிந்துரைக்க மாணவர்கள், பள்ளித் தலைவர்கள், ஆசிரியர் கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோர் வரவேற்கப்படுகின்றனர்.
இந்த வருடாந்திர விருதுக்கான நியமனங்கள் நேற்று தொடங்கி, வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

தமிழ் முரசு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியவை இணைந்து வழங்கும் ‘நல்லாசிரியர் விருது’ தமிழாசிரியர்களின் உன்னதப் பணியை அங்கீகரித்துப் பாராட்டும் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி, மத்திய கல்வி நிலையம் (Centralised Institution), சிறப்புத் தன்னாட்சிப் பள்ளிகள் (Specialised Schools) ஆகியவற்றில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் அனைவரும் இவ்விருதுக்கு முன்மொழியப்படலாம்.

முன்மொழியும் படிவங்களை அனுப்பி வைக்கவேண்டிய இறுதி நாள் வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி. நல்லாசிரியர் விருதுகளைத் தவிர்த்து, இதர இரு விருதுகளும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வழங்கப்படும். தேசிய கல்விக் கழகத்தின் சிறப்பு பயிற்சி ஆசிரியர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவையே அந்த விருதுகள்.

முன்மொழியும் படிவத்தை அனைத்துப் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். இதைத் தவிர, http://www.tllpc.sg அல்லது www.tamilmurasu.com.sg   (தமிழ்) (ஆங்கிலம்) ஆகிய இணையப் பக்கங்களிலும் முன்மொழியும் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். இணையம் வழி முன்மொழிய விரும்புவோர் https://tinyurl.com/MITT-TAMIL2019 அல்லது https://tinyurl.com/MITT-ENGLISH2019 ஆகிய இணையப் பக்கங்கள் மூலம் தங்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கலாம்.