தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கான பாதுகாப்புச் சான்றிதழ்; காலக்கெடு முன்னுக்கு கொண்டுவரப்படும்

தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கான பாதுகாப்புச் சான்றிதழ்; காலக்கெடு முன்னுக்கு கொண்டுவரப்படும்

2 mins read
b26a4977-7688-4ffb-8e15-bd99f1ed86b9
-

தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கான பாதுகாப்புச் சான்றிதழுக்கான காலக்கெடு அடுத்தாண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி என்று போக்குவரத்துத் துணை அமைச்சர் லாம் பின் மின் தெரிவித்திருக்கிறார். இந்தப் புதிய தேதி, ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட தேதியை விட ஆறு மாதங்களுக்கு முன்கூட்டியதாக உள்ளது. அத்துடன், அடுத்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனைத்து மின்-ஸ்கூட்டர்களும் பாதுகாப்புச் சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றும் அவர் அறிவித்தார்.

தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான தீச்சம்பவங்களே இந்த மாற்றங்களுக்குக் காரணம் என்று டாக்டர் லாம் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டில் 52 தீச்சம்பவங்களும் 2019ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 49 தீச்சம்பவங்களும் நடந்துள்ளன. தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் பாதுகாப்பு தொடர்பில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதித்தனர்.

தீச்சம்பவங்களை முன்கூட்டியே தடுப்பது , தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் ஓட்டுநர்கள், பாதசாரிகள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவற்றின் தொடர்பில் அவர்கள் பேசினர்.

சிங்கப்பூரர்கள் பலர் தங்கள் வாழ்வாதாரத்திற்கும் பயணத் தேவைக்கும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை நம்பியிருப்பதால் காலக்கெடுவை இந்தத் தேதிக்கு முன்கூட்டியே கொண்டுவருவது நியாயமானது என்றார் டாக்டர் லாம்.

"UL2272 பாதுகாப்புத் தரநிலைச் சான்றிதழைப் பெற்றுள்ள சாதனங்களைத் தருவிப்பதற்கான கால அவகாசத்தையும் இது கொடுக்கும்," என்றும் அவர் சொன்னார்.

UL2272 பாதுகாப்புச் சான்றிதழைப் பெறுவதற்கு முன்னர் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தகுதிபெற்ற சோதனை நிலையங்களில் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படவேண்டும். இதனை அனைத்துச் சாதனங்களுக்கும் கட்டாயமாக்கும் முடிவு கடந்தாண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்