மசகோஸ்: கவனம் முக்கியமான பிரச்சினைகளில் இருக்கட்டும்

சாதாரண பிரச்சினைகளுக்குப் பதிலாக பருவநிலை மாற்றம், பொருளியல், பாலர் பள்ளிகளின் முக்கியத்துவம் போன்ற முக்கிய பிரச்சினைகள் பற்றி சிந்திப்போம் என்று முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி அறைகூவல் விடுத்து இருக்கிறார். 

இத்தகைய முக்கியமான பிரச்சினைகளை நேற்று மலாய் சமூகத் தலைவர்களும் தொண்டூழியர்களும் இளையர்களும் ஒரு கலந்துரையாடல் கூட்டத்தில் விவாதித்தனர்.  அந்தக் கூட்டத்தில் பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சக்தியாண்டி சுப்பாட்டும் கலந்துகொண்டார். 

கலந்துரையாடலில் முக்கியமான விவகாரங்கள் எழுப்பப்பட்டது பற்றி தான் மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் மசகோஸ் கூறினார். ஜூரோங் ஈஸ்ட்டில் இருக்கும் தேவன் நாயர் வேலைநியமன, வேலை வாய்ப்புக் கழகத்தில் நேற்று நடந்த அந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டார்கள். 

முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், மெண்டாக்கி சுய உதவி அமைப்பு, மக்கள் கழகத்தின் மலாய் நற்பணிச் செயற்குழுக்கள் மன்றம் ஆகியவை ஏற்பாட்டில் அந்தக் கலந்துரையாடல் நடந்தது.  தேசிய தினப் பேரணிக்குப் பிறகு இந்த அமைப்புகள் ஏற்பாடு செய்த மூன்று கலந்துரையாடல்களில் இது கடைசியானதாகும். பருவநிலை மாற்றம் பற்றி கருத்து கூறிய சுற்றுப்புற, நீர்வள அமைச்சருமான மசகோஸ், மக்கள் தாங்கள் உருவாக்கும் கழிவுப்பொருட்களில் கவனம் செலுத்தி வரவேண்டும் என்று தெரிவித்தார். 

பொருட்கள் விரயமாவதைக் கூடுமான வரையில் குறைக்கவேண்டும் என்ற இஸ்லாமிய கோட்பாடுகளை அவர் நினைவூட்டினார். மலேசியா, இந்தோனீசியா நாடுகளைப் போல் அல்லாமல் சிங்கப்பூரில் உள்ள மலாய் சமூகம் தனித்தன்மையுடன் எப்படி திகழ்கிறது என்பது பற்றியும் அவர் பேசினார். 

சிங்கப்பூரில் எல்லா இன, சமய மக்களை ஒன்றுபடுத்தும் சிங்கப்பூரர் அடையாளமே இதற்குக் காரணம் என்றார் அவர்.