'ஆர்ச்சர்ட் டவர்ஸ்' கொலை; பிணையிலிருந்து தப்பிய ஆடவர் மறுபடியும் கைது

'ஆர்ச்சர்ட் டவர்ஸ்' கொலை; பிணையிலிருந்து தப்பிய ஆடவர் மறுபடியும் கைது

2 mins read
290dc234-8da4-494b-b980-7f0313d47d9c
-

'ஆர்ச்சர்ட் டவர்ஸ்' கொலைச்சம்பவத்தின் தொடர்பில் பிணையிலிருந்து தப்பிய ஆடவர் மறுபடியும் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். திரு சதீஸ் நொவெல் கோபிதாஸின் கொலையின் தொடர்பில் தொடக்கத்தில் குற்றம் சாட்டப்பட்ட எழுவரில் ஒருவரான 22 வயது டான் ஹோங் ஷெங் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

சம்பவத்துடன் தொடர்பில்லாத கலவரக் குற்றச்சாட்டு ஒன்றும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

திரு சதீஸின் கொலையின் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அறுவர்: 22 வயது நெட்டலி சியாவ் யூ ஸென், 25 வயது லூ பூன் சோங், 27 வயது டான் சேன் யாங், 26 வயது ஜொவெல் டான் யூன் ஷென், 26 வயது சான் ஜியா ஸிங், 26 வயது ஆங் டா யுவான் ஆகியோர். டான் சேன் யாங்கிடம் மடக்கக்கூடிய 'கெராம்பிட்' என்ற வளைவான கத்தி இருந்ததாக நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்கவும்: 'ஆர்ச்சர்ட் டவர்ஸ்': சம்பவ இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சந்தேக நபர்கள்

ஜூலை மாதம் 11ஆம் தேதி காலை 5.46 மணிக்கு ஆர்ச்சர்ட் டவர்ஸ் கடைத்தொகுதியின் இரண்டாவது மாடியிலுள்ள 'நாட்டி கர்ள் கிளப்' என்ற கேளிக்கைக் கூடத்தில் திரு சதீஸ் தாக்கப்பட்டார். திரு சதீஸ் தாக்கப்பட்டதை ஆர்ச்சர்ட் டவர்ஸ் கடைத்தொகுதிக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த கேமராக்களில் பதிவான காணொளிகள் காட்டின.

டான் ஹொங் ஷெங், லூ, சான் ஆகியோருக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டு, ஆபத்தான ஆயுதத்தைப் பொது இடத்தில் உடன் வைத்திருந்ததன் தொடர்பிலான குற்றச்சாட்டாக மறுவகைப்படுத்தப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி லூவும் சானும் நீதிமன்றத்தில் முன்னிலையானார். ஆனால் டான் ஹோங் ஷெங் தலைமறைவாகினர். அப்போது அவருக்கு எதிராகக் கைதாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

விசாரணை தொடர்கிறது.