சிங்கப்பூரையும் ஜோகூரையும் இணைக்கும் கடற்பாலத்திலும் துவாஸ் இரண்டாவது இணைப்பிலும் ஏற்பட்டுவரும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அங்கு கூடுதலாக 50 மோட்டார் சைக்கிள் தடங்கள் அமைக்கப்படும் என்றும் அதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 85 மில்லியன் ரிங்கிட் (S$28 மில்லியன்) நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மலேசிய அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.
தமது அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை வரவேற்ற 40 வயது தொழில்நுட்பர் கே. சுஷேந்திரன், "இந்த நடவடிக்கை எதிர்பார்க்கும் அளவுக்கு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தாது.
"கடற்பாலத்தையும் துவாஸ் இரண்டாவது இணைப்பை யும் நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிளோட்டிகள் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கூடுதல் 50 தடங்கள் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வராது. அதனால் போக்கு வரத்து நெரிசல் சற்று குறையலாம். ஆனால், நெரிசல் அப்படியேதான் இருக்கும். நிலைமையை மேம்படுத்த குடிநுழைவு முகப்புகளில் போதுமான எண்ணிக்கையில் அதிகாரிகளை அமர்த்துவது உதவும்," என்றார்.
கடற்பாலத்திலும் துவாஸ் இரண்டாவது இணைப்பிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம், அவற்றை அதிகமான கார்கள், லாரிகள், பேருந்து கள் பயன்படுத்துவதுதான் என்றார் 38 வயது தனியார் பாதுகாவல் அதிகாரி கே. விஸ்வம்.
ஜோகூர் பாருவில் உள்ள குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் தற்போது 100 மோட்டார் சைக்கிள் தடங்களும் இரண்டாவது இணைப்பில் உள்ள குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் 50 மோட்டார் சைக்கிள் தடங்களும் உள்ளன.

