மலிவு விலையில் மக்களின் சத்துணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தரமான உணவு கிடைக்கக்கூடிய நாடுகளில் சிங்கப்பூர், இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் வந்துள்ளது.
உலகளாவிய உணவுப் பாதுகாப்பு ஆய்வில் பங்கேற்ற மொத்தம் 113 நாடுகளில் முதலிடத்தைப் பிடித்தது சிங்கப்பூர்; இரண்டாவது நிலையில் ஐயர்லாந்து.
மலிவான உணவு, மக்களுக்கு எளிதில் கிட்டக்கூடிய உணவு, பாதுகாப்பும் சத்தும் நிறைந்த உணவு என்ற கூறுகளின் அடிப்படையில் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு இந்த ஆய்வினை மேற்கொண்டது.
ஆய்வில் சிங்கப்பூர் 87.4 புள்ளிகளைப் பெற்றிருந்தது. ஐயர்லாந்தைவிட மூன்று புள்ளிகள் முன்னிலையில் வந்தது சிங்கப்பூர்.
பட்டியலின் முதல் 20 இடங்களில் இடம்பெற்ற ஒரே ஆசிய நாடும் சிங்கப்பூரே.
இதன் தொடர்பில் ஆய்வை மேற்கொண்ட ஆசிரியரும் பொருளியல் நுண்ணறிவுப் பிரிவைச் சேர்ந்தவருமான திரு சுமனா ராஜரத்னம், சென்ற ஆண்டைக்காட்டிலும் இவ்வாண்டு சிங்கப்பூரில் கிடைக்கக்கூடிய உணவுகளின் விலை மேலும் மலிவாக உள்ளதாகக் கூறினார்.
பல மூலங்களிலிருந்து உணவு கிடைப்பதால் கிடைக்கும் உணவின் அளவும் அதிகரித்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, சென்ற ஆண்டுடன் 180க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து சிங்கப்பூர் அதன் உணவை இறக்குமதி செய்து வந்துள்ளது. 2004ஆம் ஆண்டில் 140 நாடுகளிலிருந்து மட்டுமே உணவு இறக்குமதி ஆனது.
கடந்த ஆண்டுகளில் சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சி அதிகரித்ததன் காரணமாக, சிங்கப்பூரர்களின் உணவு வாங்கும் ஆற்றலும் அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் உணவு அமைப்பின் தலைவர் லிம் சுவான் போ கூறினார். இதனால் மக்களால் தரமான உணவை வாங்க முடிகிறது.
உலக மக்களில் ஒன்பதில் ஒருவருக்கு, அதாவது கிட்டத்தட்ட 820 மில்லியன் பேருக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை என்று ஐக்கிய நாடுகள் இவ்வாண்டின் முற்பாதியில் வெளியிட்ட ஓர் அறிக்கை தெரிவித்தது.
வறுமை, வேளாண்மைக் கட்டமைப்பு இல்லாதது, முக்கிய சத்துகள் கிடைக்காமல் போவது ஆகிய மூன்று சவால்களால் உணவுப் பாதுகாப்பு பாதிப்படைவதாகக் கூறப்பட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity