சிங்கப்பூருக்கும் சென்னைக்கும் இடையே போயிங் 787-10 டிரீம்லைனர் விமானங்களை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கவுள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதம் முதல் ஏர்பஸ் A330-300 விமானங்களுக்குப் பதிலாக போயிங் 787-10 டிரீம்லைனர் விமானங்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் சிங்கப்பூருக்கும் சென்னைக்கும் இடையிலான விமானச் சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
அதிநவீன ரக விமானங்களைக்கொண்டு சென்னைக்கு விமானச் சேவை வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்வதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இந்தியாவுக்கான பொது மேலாளர் டேவிட் லிம் தெரிவித்தார்.
போயிங் 787-10 டிரீம்லைனர் விமானங்களில் 337 இருக்கைகளும் இரு பிரிவுகளும் இருக்கும். வர்த்தகப் பிரிவில் 36 இருக்கைகளும் ‘எகானமி’ பிரிவில் 301 இருக்கைகளும் இருக்கும்.
புதிய விமானங்களை அறிமுகம் செய்வதன் மூலம் சிங்கப்பூருக்கும் சென்னைக்கும் இடையில் வாரந்தோறும் 13 விமானச் சேவைகள் வழங்கப்படும். தற்போது வாரத்துக்கு 10 விமானச் சேவைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சில்க்ஏர் உடன் இணைந்து, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள்ளாக, வாரத்துக்கு 17 விமானச் சேவைகள் வரை வழங்கப்படும் என்று சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity