ஹவ்காங் அவென்யூ 9ல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 15) அன்று மாலை 5.15 மணியளவில் புளோக் 917Aக்கு அருகில் வெளிநாட்டு ஊழியர்கள் இருவர் மிகவும் கவனமாக நுணுக்கமான வேலை ஒன்றைச் செய்துகொண்டிருந்தனர்.
அருகில் சென்று பார்த்த ஸ்டோம்ப் வாசகர் மெல்லிசா, அந்த வேலை முடியும் வரை அருகில் இருந்து பார்த்ததுடன் அங்கு எடுத்த ஒரு காணொளியையும் பகிர்ந்தார் (செய்திக்குக் கீழே காணொளி இணைக்கப்பட்டுள்ளது).
அந்த ஊழியர் என்ன செய்துகொண்டிருந்தார்?
காலில் நூல் சுற்றியிருந்ததால் பறக்க முடியாமல் இருந்த ஒரு சிறிய பறவையை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் அவர். பறவையின் காலில் சுற்றியிருந்த மிக நீண்ட, சிக்கல் விழுந்த நூல் ஒன்றை மிகுந்த கவனத்துடன் விடுவித்துக்கொண்டிருந்தார்.
அந்தப் பறவை மிகச் சிறியதாக இருந்ததால் சற்று கவனக்குறைவாக நூலை இழுத்தாலும் அதன் கால் அல்லது விரல்களில் காயம் ஏற்படும் அபாயம் இருந்ததால் அந்த ஊழியர் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டியிருந்தது.
சுமார் 10 நிமிடங்களுக்குப் பொறுமையாகச் செயல்பட்ட அந்த ஊழியர்கள் சிக்கலை விடுவித்தபின் மிகுந்த மகிழ்ச்சியுடன் பறவையைப் பறக்கவிட்டனர்.
சிக்கலை விடுவித்து நூலை அகற்றி பறவையைப் பறக்கவிட்ட இறுதி வினாடிகளைப் பதிவு செய்த வாசகர் மெல்லிசா, வெளிநாட்டு ஊழியர்களின் இந்தச் செயலுக்கு அவர்களைப் பாராட்டினார்.
இதுபோன்ற விஷயங்களில் கவனம் செலுத்தாத நம்மில் பலரைவிட வெளிநாட்டு ஊழியர்கள் மிகவும் கனிவானவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity