செதுக்கிவைத்த சிலைபோல் அழகாக இருப்பதாக ரசிகர்களால் வர்ணிக்கப்படும் நடிகை காஜல் அகர்வாலை மெழுகுச் சிலையாக வடித்துக் கௌரவிக்க உள்ளது சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம்.
இந்த அறிவிப்பு தனக்கு மாபெரும் மரியாதையையும் கௌரவத்தையும் அளித்துள்ளதாகவும் இதன் காரணமாக தான் அதிகபட்ச மகிழ்ச்சியை உணர்வதாகவும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உலக அரசியல் தலைவர்கள், ஹாலிவுட், பாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள், விளையாட்டுப் பிரபலங்களின் மெழுகுச் சிலைகளை காட்சிப்படுத்தி கௌரவித்துள்ளனர்.
பாலிவுட் நடிகைகளில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா, பிரியங்கா சோப்ரா, மாதுரி தீட்சித், முன்னணி நடிகர்கள் அமிதாப்பச்சன், ஷாருக்கான், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு ஆகியோரின் சிலைகளும் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கும் இங்கு மெழுகுச்சிலை வைக்கப்போவதாகவும் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி இச்சிலைக்கு திறப்பு விழா நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சிலையை காஜல் அகர்வாலே திறந்து வைக்க சிங்கப்பூருக்கு வரவுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், மெழுகுச் சிலை அமைப்பது குறித்து தான் பெருமை அடைவதாகக் கூறியுள்ளார்.
சிலை அமைப்பதற்காக அருங்காட்சியக உறுப்பினர்கள் தன்னைச் சந்தித்து அளவு எடுத்துச் சென்ற புகைப்படங்களையும் காஜல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
“நான் சிறு பிள்ளையாக இருந்தபோது மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்திற்குச் சென்று அங்குள்ள சிலைகளைப் பார்த்து வியந்தது இன்னும் என் நினைவில் உள்ளது. தற்போது அந்தச் சிலைகள் மத்தியில் என் சிலையும் இருக்கப்போவதை நினைத்து பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
“இத்தனை ஆண்டுகால என் கடின உழைப்பும் தியாகங்களும் வீண் போகவில்லை. உங்களின் அன்புக்கு நன்றி,” என்று தெரிவித்துள்ளார்.
காஜல் அகர்வால் தற்போது ‘மும்பை சாகா’ இந்திப் படத்திலும் கமல் ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்திலும் நடித்து வருகிறார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity