செங்காங்கில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் (கொண்டோமினியம்) உள்ள வீடு ஒன்றில் 43 வயது பெண் கொல்லப்பட்ட சந்தேகத்தின் பேரில் 48 வயது ஆடவர் இன்று (ஜனவரி 3) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நீதிமன்றத்தில் நாளை குற்றஞ்சாட்டப்படும்.
எண் 125 காம்பஸ்வேல் போவில் இருக்கும் எஸ்பரினா ரெசிடன்சஸ் எனும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு ஒன்றில் நிகழ்ந்த இயற்கைக்கு மாறானதாக வகைப்படுத்தப்பட்ட இந்த மரணம் பற்றி இன்று பிற்பகல் 12.07 மணியளவில் தகவல் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர்.
இறந்துபோன பெண்ணும் கைது செய்யப்பட்ட ஆடவரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று போலிசார் தெரிவித்தனர்.
அசைவின்றி கிடந்த அந்தப் பெண், இறந்து போனதை துணை மருத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உறுதிசெய்தனர்.
கொலை என்று வகைப்படுத்தப்பட்ட இந்தச் சம்பவம் குறித்து போலிசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity