பாலியல் தொழிலாளிகள் என்று சந்தேகிக்கப்பட்ட இரு பெண்களுக்கு போலிஸ் விசாரணை அறையிலேயே பாலியல் தொல்லை கொடுத்த மூத்த போலிஸ் விசாரணை அதிகாரி பதவியிறக்கம் செய்யப்பட்டதுடன் பணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
லீ ஸி சியட் எனும் 39 வயதான மூத்த ஸ்டாஃப் சார்ஜன்டுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் ஒரு பிரம்படியும் கடந்த ஆண்டு நவம்பரில் விதிக்கப்பட்டது. அவரது பணியில் அவருக்கு 17 ஆண்டுகள் அனுபவம் இருப்பது குறிப்பிடத்தகக்து.
கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் தேதி முதல் வேலையிலிருந்து அவருக்கு விலக்க ஆணை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி அவரது குற்றம் நிரூபணமான பிறகு அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையை சிங்கப்பூர் போலிஸ் படை தொடங்கியது.
அரசிதழில் கடந்த வியாழக்கிழமை (ஜனவரி 2) வெளியான தகவலின்படி, போலிஸ் கான்ஸ்டபிளாக பதவியிறக்கம் செய்யப்பட்ட லீ, சிங்கப்பூர் போலிஸ் படையிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதியிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் 2002ஆம் ஆண்டு போலிஸ் படையில் பணியில் சேர்ந்தார்.
இந்தக் குற்றச் செயல்களில் லீ ஈடுபட்டபோது அவர் ஜூரோங் பிரிவின் மூத்த விசாரணை அதிகாரியாக இருந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இரண்டு சீனப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து, அந்த வழக்கில் உதவ முன்வந்தார் லீ. 28, 29 வயதுகளில் இருந்த அந்தப் பெண்கள் ஜூரோங் போலிஸ் பிரிவு தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.
அந்தப் பெண்களை தனித்தனியாக விசாரணை அறைக்கு அழைத்துச் சென்றார் லீ.
முதலில் அழைத்துச் சென்ற 28 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் லீ. கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில் லீக்கு உடற்பிடிப்பு சேவையையும் வழங்கினார் அந்தப் பெண். மற்ற ‘சேவைகளை’யும் லீ கோரியதாகவும் அந்தப் பெண் அதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
பின்னர் விலங்கிடப்பட்ட நிலையில் 29 வயதுப் பெண் பாலியல் ரீதியான செயல்களை லீ மீது செய்ய வேண்டியிருந்தது.
28 வயதுப் பெண் பின்னர் லீக்கு எதிராக புகாரளித்தார்.
ஒரு போலிஸ் அதிகாரி செய்யக்கூடிய மிகக் கடுமையான ஒழுங்கீனக் குற்றம் இது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.
அவரது கட்டுப்பாட்டில் இருந்த, எளிதில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பெண்களை லீ சுயநலமாகப் பயன்படுத்திக்கொண்டதாகவும், கடமை தவறியதாகவும் அவர்கள் வாதாடினர்.
இது தனிப்பட்ட வழக்கு என்றும் இது நிபுணத்துவம் பெற்ற ,நன்னடத்தைகொண்ட சிங்கப்பூர் போலிஸ் படை அதிகாரிகளைப் பிரதிநிதிக்காது என்றும் படையின் பேச்சாளர் முன்பு தி நியூ பேப்பர் செய்தியாளரிடம் குறிப்பிட்டிருந்தார்.