கோலாலம்பூரை சிங்கப்பூருடன் 90 நிமிடங்களில் இணைக்கும் அதிவேக ரயில் திட்டமும் சிங்கப்பூர்-ஜோகூர் பாரு இணைப்பு ரயில் திட்டமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய விளக்கம் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
“கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் இவ்வாண்டு மே மாதம் 31ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
“நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் இரு தரப்புகளும் இத்திட்டத்தை எவ்வாறு சிறப்பாக முன்னெடுத்துச் செல்லலாம் என்பதை விவாதிக்கலாம் என்று மலேசியா கோரிக்கை விடுத்துள்ளது.
“இதுவரை மலேசியாவிடம்இருந்து எவ்வித முறையான முன்மொழிவுகளும் கிடைக்கப்பெறவில்லை,” என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மலேசியாவுடன் சிங்கப்பூர் செய்துகொண்டுள்ள இந்த இரு ரயில் திட்டங்களின் ஆகக் கடைசி நிவவரம் குறித்து விளக்கமளிக்குமாறு ஜூரோங் குழுத் தொகுதி உறுப்பினர் அங் வெய் நெங், போக்குவரத்து அமைச்சரிடம் விளக்கம் கேட்டிருந்தார்.
அதற்கு திரு கோ, எழுத்துபூர்வ பதில் அளித்தார்.
“ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இணைப்பு ரயில் திட்டம் (ஆர்டிஎஸ்) இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
“கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், சில மாற்றங்களுடன் ஆர்டிஎஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தனது விருப்பத்தை மலேசியா, சிங்கப்பூரிடம் தெரிவித்தது.
“ஆனால், அந்த உத்தேச மாற்றங்கள் என்ன என்பதை சிங்கப்பூருடன் முறையாகப் பகிர்ந்துகொள்ள மலேசியா தயாராக இல்லை. இருப்பினும், அந்த மாற்றங்கள் குறித்த அணுக்கமான பேச்சுகளை சிங்கப்பூர் மலேசியாவுடன் நடத்தி வருகிறது.
“இரு அரசாங்கங்களுக்கு இடையிலான ஆர்டிஎஸ் இணைப்பு இருதரப்பு உடன்பாடு, சிங்கப்பூர் எம்ஆர்டி கழகமும் மலேசியாவின் பிரசாரனா மலேசியா நிறுவனமும் இணைந்து ‘ஆப்கோ’ எனும் கூட்டு முதலீட்டு நடைமுறை நிறுவனத்தை அமைக்கும் உடன்பாடு, ‘ஆப்கோ’ நிறுவனத்தை ஆர்டிஎஸ் இணைப்பு நடத்துநராக இரு அரசாங்கங்களும் நியமிக்கும் சலுகை உடன்பாடு ஆகியவை அவற்றுள் அடங்கும்,” என்றும் அமைச்சர் கோ விளக்கம் அளித்தார்.
மலேசியா அதன் முழுமையான பரிந்துரையின் விவரங்களை சிங்கப்பூருக்குத் தெரியப்படுத்தினால் அது குறித்து குடியரசு அணுக்கமாக மதிப்பீடு செய்து பின்னர் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்தும் என்றும் திரு கோ கூறினார்.
“இந்த இரண்டு திட்டங்களிலும் மலேசியா தெரிவிக்கும் உத்தேச மாற்றங்களை சிங்கப்பூர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை என்ற போதிலும் அவற்றை திறந்த மனத்துடன் சிங்கப்பூர் நோக்கும்.
“இந்த இரு திட்டங்களும் இரு நாடுகளுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் நன்மை அளிக்கும் சிறந்த திட்டங்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்,” என்றும் அமைச்சர் கோ தனது பதிலில் குறிப்பிட்டிருந்தார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity