பிலிப்பீன்ஸ் எரிமலை: விமானச் சேவைகள் பாதிப்பு

பிலிப்பீன்ஸ் எரிமலை: விமானச் சேவைகள் பாதிப்பு

1 mins read
f8d49096-9775-4a16-98f8-ee00e28db564
எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்ஸ் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சு சிங்கப்பூரர்களை அறிவுறுத்தியுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவுக்கு தெற்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து சிங்கப்பூருக்கும் மணிலாவுக்கும் இடையே இன்று குறைந்தது 10 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட விமானங்களில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), ஸ்கூட், ஜெட்ஸ்டார் ஏர்வேஸ், பிலிப்பீன்ஸ் ஏர்லைன்ஸ் உள்ளிட்டவை அடங்கும் என சாங்கி விமான நிலையத்தின் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டது.

சிங்கப்பூரிலிருந்து மணிலாவுக்கு இன்று காலை 9.15 மணிக்குப் புறப்பட்டிருக்க வேண்டிய விமானச் சேவை, பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பிலிப்பீன்சில் நேற்று முன்தினம் 'டால்' எரிமலை பெரியளவில் சாம்பலைக் கக்கியதைத் தொடர்ந்து மணிலா முழுவதும் சாம்பல் பரவியது. இதனால் மணிலாவின் நினோய் அக்வினோ அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்டது. இருப்பினும், விமானச் சேவைகளின் ஒரு பகுதி இன்று தொடர்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மணிலாவிலிருந்து புறப்படும் விமானச் சேவைகளில் ஒரு பகுதி இன்று சிங்கப்பூர் நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கியதாகவும் மணிலாவுக்கு வரும் சேவைகள் நண்பகல் 12 மணிக்கு தொடங்கியதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சிங்கப்பூருக்கும் மணிலாவுக்கும் இடையே விமானச் சேவைகளை ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் நிறுவனம் ரத்து செய்தது.

எரிமலை குமுறியதால் தனது ஒரு சில விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டதை ஸ்கூட் நிறுவனம் உறுதிப்படுத்தியது. உதாரணத்திற்கு, மணிலாவுக்கு டிஆர்392 விமானம் காலை 5.15 மணிக்கு புறப்பட்டிருக்க வெண்டியிருந்தது.

ஆனால், விமானச் சேவை காலை 10 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

#தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்