சுடச் சுடச் செய்திகள்

சிங்கப்பூர் நிரந்தரவாச விண்ணப்பத்தில் போலி கல்வித் தகுதி; பெண்ணுக்கு சிறை

சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதிக்கான விண்ணப்பத்தில் போலி கல்வித் தகுதியைக் குறிப்பிட்ட 38 வயது பெண்ணுக்கு ஏழு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு நிரந்தரவாசத் தகுதிக்காக விண்ணப்பம் செய்த பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த டி லூனா நோரிசா டேன்செல் எனும் மாது, 2009ஆம் ஆண்டில் தம் மகளின் நிரந்தரவாசத் தகுதிக்காக விண்ணப்பித்த போதும் அதே போலி கல்வித் தகுதியைக் குறிப்பிட்டிருந்தார். மணிலா பல்கலைக்கழகத்தில் பட்டக் கல்வி பயின்றதாக அவர் அந்த விண்ணப்பங்களில் குறிப்பிட்டிருந்தார்.

சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள் பரிசோதனை செய்து அது போலியான தகவல் என்பதைக் கண்டறிந்த பிறகு 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி டி லூனாவை போலிசார் கைது செய்தனர். அவருக்கு இம்மாதம் 14ஆம் தேதி தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் படித்ததாகக் குறிப்பிடப்பட்ட சென்டிரோ எஸ்காலர் பல்கலைக்கழகத்தில் அவர் சேர்ந்ததற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. டி லூனா சமர்ப்பித்த பட்டச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல் போன்றவை அந்தப் பள்ளியிலிருந்து வழங்கப்படவில்லை.

டி லூனாவின் நிரந்தரவாசத் தகுதி பற்றி குறிப்பாக ஏதும் சொல்லாத குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தின் பேச்சாளர், குற்றம் செய்த நிரந்தரவாசிகளின் தகுதி பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விக்குப் பதிலளித்தபோது தெரிவித்தார்.

குற்றத்தின் கடுமை, இந்தக் குற்றத்தில் அவரது பங்கு, சிறைத் தண்டனைக்காலம் ஆகிய காரணிகளைப் பொருத்து  அவரது நிரந்தரவாசத் தகுதி பற்றி முடிவெடுக்கப்படும் என்றார் அவர்.

குடிநுழைவு விண்ணப்பங்களில் போலி தகவல்களைக் கொடுத்தது அல்லது முக்கியமான தகவல்களை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் எச்சரித்தது. அவர்களது குடிநுழைவு தகுதிகூட மீட்டுக்கொள்ளப்படலாம். அத்தகைய குற்றம் புரிவோரின் குடும்பத்தாரின் குடிநுழைவு தகுதியும் பரிசீலிக்கப்படும் என்று ஆணையம் குறிப்பிட்டது.

#ICA #தமிழ்முரசு #நிரந்தரவாச #விண்ணப்பம் #போலிசான்றிதழ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon