லிட்டில் இந்தியாவில் சட்டவிரோதமாக வாணங்களை வெடித்த ஆடவர் கைது

லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த ஆண்டு தீபாவளி வாரயிறுதியில் பின்னிரவு 1.20 மணிக்கு சட்டவிரோதமாக வாணவெடிகளை வெடித்ததாக நம்பப்படும் 21 வயது ஆடவர் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அபாயகரமான வாணவெடிகளை வெடித்ததாக அவர் மீது நாளை (ஜனவரி 21) குற்றம் சாட்டப்படும் என்றும் போலிஸ் தெரிவித்தது. 
 
அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் $2,000 முதல் $10,000 வரையிலான அபராதம், ஈராண்டுகள் வரை சிறைத் தண்டனை போன்றவை விதிக்கப்படலாம்.

லிட்டில் இந்தியாவில் சட்டவிரோதமாக வாணம் வெடித்ததாக 43 வயது ஆடவரும் ஜூரோங்கில் வாணம் வெடித்ததாக 38 வயது ஆடவரும்  சென்ற ஆண்டு கைது செய்யப்பட்டனர்.

இரவுநேர கேளிக்கைக்கூடம் ஒன்றில் பணிபுரிந்த 43 வயது ஆடவருக்கு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

38 வயது ஆடவர் ஜூரோங்கில் வீடமைப்பு குடியிருப்புப் பகுதியில் கொளுத்திய வெடி 12வது மாடி உயரம் வரை சென்றதைக் காட்டும் 23 வினாடி காணொளி வெளியானது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக, சிங்கப்பூரில் 1972ஆம் ஆண்டிலிருந்து வாணவெடிகள் தடை செய்யப்பட்டுள்ளன. சில சிறப்பு நிகழ்வுகளில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பிறகு வாணவேடிக்கைகள் அனுமதிக்கப்படும். 

#தமிழ்முரசு #தீபாவளி #வாணவெடி #லிட்டில்இந்தியா