பயணிகள் கவலை: ஜோகூர்பாரு சோதனைச்சாவடியில் உடல்வெப்பநிலை சோதனை இல்லை

பயணிகள் கவலை: ஜோகூர்பாரு சோதனைச்சாவடியில் உடல்வெப்பநிலை சோதனை இல்லை

2 mins read
2e79219b-f367-4bc3-93df-86b910e9a6c0
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்கு வெளியே பயணிகள். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஜோகூரின் சோதனைச்சாவடிகளில் பயணிகளுக்கு உடல்வெப்பநிலை சோதனை இல்லை என்று அன்றாடம் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் சென்று வரும் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மோட்டார்சைக்கிள்கள், கார்கள், பேருந்துகள், ரயில்களில் வருவோருக்கு ஜோகூர் சோதனைச்சாவடிகளில் உடல் பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை என்று அடிக்கடி சென்று வரும் பயணிகள் கூறுகிறார்கள்.

உட்லண்ட்சிற்கும் ஜோகூர் பாரு சென்ட்ரலுக்கும் இடையில் ஓடும் கேடிஎம்பி ரயில் சேவைகளை அன்றாட அடிப்படையில் சுமார் 8,000 பயணிகள் பயன்படுத்துகிறார்கள்.

நாள்தோறும் மோட்டார்சைக்கிளில் சிங்கப்பூருக்கு வந்து செல்லும் தனியார் துறை பாதுகாப்புக் காவலரான கே. விஸ்வம், 38, என்பவர், ஜோகூர் சோதனைச்சாவடியில் பயணிகளுக்கு உடல் பரிசோதனை நடத்தப்படவில்லை என்றார்.

அதேபோல மலேசியாவுக்கு மோட்டார்சைக்கிளில் செல்லும்போது பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை என்று அடிக்கடி சென்று வரும் எஸ். தமிழ்அருணன், 32, என்பவர் கவலை தெரிவித்தார். கொரோனா வைரஸ் கிருமிகள் தலைகாட்டி இருக்கும் இந்த நேரத்தில் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று தாம் நினைத்ததாக அவர் கூறினார்.

இதனிடையே, அண்மையில் சிங்கப்பூருக்கு விடுமுறை நிமித்தம் தன் குடும்பத்துடன் வந்திருந்த டென் யென் லிங், 40, என்ற மாது உட்லண்ட்ஸ் சாவடியில் கடுமையான பரிசோதனைகள் இடம்பெற்று இருந்ததாகத் தெரிவித்தார்.

சிங்கப்பூர் நடத்திய சோதனை காரணமாக போக்குவரத்து தேக்கம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால் மலேசியாவுக்கு போனபோது கிருமி பரிசோதனை எதுவும் இல்லை என்றும் அதனால் போக்குவரத்து தேக்கமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதனிடையே, ஜோகூர் மாநிலத்துக்கான எல்லா நுழைவாயில்களிலும் கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் இடம்பெற வேண்டும் என்று ஜோகூர் முதல்வர் ஜமால் கோத்தா, இஸ்கந்தரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோது கோரிக்கை விடுத்தார்.

#சிங்கப்பூர்மலேசியாபயணிகள் #ஜோகூரில்சோதனைஇல்லை #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்