கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் பணியாற்றிய எண்மர் தனிமைப்படுத்தப்பட்டனர்

கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவருடன் பணியாற்றிய எண்மர் தனிமைப்படுத்தப்பட்டனர்

2 mins read
a06b5e2d-8c96-4ff7-9ef9-e0ce9b96aa24
தற்போது அவர் சிங்கப்பூர் தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொரோனா கிருமித் தொற்று நேற்று (பிப்ரவரி 6) உறுதிசெய்யப்பட்ட இருவரில், 41 வயதான ஆடவருக்கு, அந்த கிருமித்தொற்று பாதிப்புள்ள யாருடனும் தொடர்பிருந்திருக்கவில்லை என்றும் அவர் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

அவருக்கு கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்ட அன்று, அலுவலக நண்பர்கள் 20 பேருடன் ஜூரோங்கில் உள்ள பிரபலமான சீன உணவகம் ஒன்றில் 'சீனப் புத்தாண்டு விருந்து (லோஹெய்)' சாப்பிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அந்த விருந்தில் கலந்துகொண்டவர்களில் எண்மர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் அரசாங்க அதிகாரிகள், அந்த 41 வயது ஆடவரின் அலுவலக சகாக்களுக்கு தனிமைப்படுத்தல் ஆணையை வழங்கியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு தகவல் அளித்தவர் தெரிவித்தார்.

அந்த 41 வயது ஆடவர் ஜூரோங்கில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிவதாகத் தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 29, 30 தேதிகளில் இரண்டு தனியார் மருந்தகங்களில் மருத்துவர்களைப் பார்த்து சிகிச்சை பெற்ற அவர், பின்னர் மவுண்ட் எலிசபெத் நொவீனா மருத்துவமனையில் பிப்ரவரி 3ஆம் தேதி சிகிச்சைக்காகச் சேர்ந்தார்.

தற்போது அவர் சிங்கப்பூர் தொற்றுநோய் தடுப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிலேத்தாரில் உள்ள கிரீன்விச் வி பகுதியில் இருக்கும் ஃபோனிக்ஸ் மெடிக்கல் குரூப் மருத்துவமனை அவர் சென்ற தனியார் மருத்துவமனைகளில் ஒன்று.

அந்த மருத்துவமனை முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆடவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தாமாகவே முன்வந்து இம்மாதம் 17ஆம் தேதி வரை விடுப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

#தமிழ்முரசு #கொரோனா #சிலேத்தார்

குறிப்புச் சொற்கள்