சிங்கப்பூரில் மேலும் ஐவருக்கு கிருமித்தொற்று; இருவர் வெளிநாட்டு ஊழியர்கள்

2 mins read
3e947afc-0eb1-4580-a441-7446462a56c3
ஐந்து சம்பவங்களும் ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்புடையவை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் மேலும் ஐவருக்கு 'கொவிட்-19' கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதை இன்று (பிப்ரவரி 15) சுகாதார அமைச்சு உறுதி செய்தது.

அவர்களில் மூவர் 'கிரேஸ் அசெம்ப்ளி ஆஃப் காட்' தேவாலயத்துடன் சம்பந்தப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்.

சிலேத்தார் ஏரோஸ்பேஸ் ஹைட்ஸ் கட்டுமானத் தளத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்புடைய ஒருவர், இதற்கு முன்பு கிருமித்தொற்று கண்ட மற்றொருவருடன் தொடர்புடைய ஒருவர் என ஐந்து சம்பவங்களும் ஏற்கெனவே கிருமித்தொற்று கண்டவர்களுடன் தொடர்புடையவை.

புதிய ஐந்து சம்பவங்களையும் சேர்த்து சிங்கப்பூரில் 'கொவிட்-19' கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆகியுள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 68வது நபர் 79 வயதான பெண் சிங்கப்பூரர். அவர் அண்மையில் சீனாவுக்குச் செல்லவில்லை. ஆனால்,கிருமித்தொற்று ஏற்பட்ட 66வது நபரின் குடும்ப உறுப்பினர் அவர்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 69வது நபர் 26 வயதான பங்ளாதேஷ் நாட்டவர். சிங்கப்பூரில் வேலை அனுமதிச்சீட்டுடன் பணிபுரியும் இவரும் அண்மையில் சீனாவுக்குச் செல்லவில்லை. ஆனால், சிலேத்தார் ஏரோஸ்பேஸ் ஹைட்ஸ் கட்டுமானத்தளத்தில் பணிபுரினந்த இரண்டு பங்ளாதேஷ் ஊழியர்களுக்கு ஏற்கெனவே கிருமித்தொற்று ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 70வது நபர் 27 வயதான சிங்கப்பூர் குடிமகள். அவர் அண்மையில் சீனாவுக்குச் செல்லவில்லை. ஆனால், கிருமித்தொற்று ஏற்பட்ட 66வது நபரின் குடும்ப உறுப்பினர் இவர்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 71வது நபர் 25 வயதான சிங்கப்பூர் குடிமகன். அவர் அண்மையில் சீனாவுக்குச் செல்லவில்லை. ஆனால், கிருமித்தொற்று ஏற்பட்ட 66வது நபருடன் தொடர்புடையவர்.

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 72வது நபர் 40 வயதான சீன ஆடவர். சிங்கப்பூரில் வேலை அனுமதிச் சீட்டுடன் இங்கு பணிபுரிந்து வருகிறார். அவர் அண்மையில் சீனாவுக்குச் செல்லவில்லை. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 59வது நபருடன் தொடர்புடையவர் (மருத்துவம் சம்பந்தப்பட்ட தொடர்பு இல்லை).

சிகிச்சை முடிந்து மேலும் ஒருவர் வீடு திரும்பியுள்ளார்.

இதுவரை மொத்தம் 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வரும் 54 பேரில் பெரும்பாலானோரின் உடல் நிலை சீராகவே உள்ளது. ஆனால், 6 பேரின் உடல் நிலை மோசமாக இருப்பதால் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

#தமிழ்முரசு #கொரோனா

குறிப்புச் சொற்கள்