சுவா சூ காங்கில் அபாயகரமான ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக 17 முதல் 28 வயதுக்குட்பட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எண் 10 சுவா சூ காங் வேயில் கலவரம் நடப்பதாக நேற்று முன்தினம் (பிப்ரவரி 27) பிற்பகல் 2.25 மணிக்கு போலிசுக்கு தகவல் கிடைத்தது.
குற்றவியல் விசாரணைத் துறை, ஜூரோங் போலிஸ் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள், கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட 13 பேரின் அடையாளங்களைக் கண்டறிந்து, 28 மணி நேரத்துக்குள் அவர்கள் அனைவரையும் கைது செய்ததாக இன்று போலிசார் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
ஜாலான் புக்கிட் மேரா, வெஸ்ட் கோஸ்ட் ரோடு, ஈசூன், புக்கிட் பாத்தோக், லோவர் கென்ட் ரிட்ஜ் ரோடு ஆகிய பகுதிகளின் பல்வேறு இடங்களில் இந்த 13 பேரும் கைதானதாகத் தெரிவிக்கப்பட்டது.
கத்தி, முட்டிக்காப்பு, உலோகக் கம்பி, உலோகப் பாளம் போன்ற, கலவரத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஆயுதங்களும் போலிசாரால் கைப்பற்றப்பட்டன.
இன்று அவர்களில் ஐவர் மீது அபாயகரமான ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
மற்ற எட்டுப் பேர் மீதும், அபாயகரமான ஆயுதங்களுடன் சட்டவிரோதமாகக் கூடியதாக இன்று குற்றம் சாட்டப்படும் என்று கூறப்பட்டது. அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படிகள் போன்றவை விதிக்கப்படலாம்.
#சிங்கப்பூர் #கலவரம் #சுவா சூ காங் #தமிழ்முரசு

