நான்கு ஆடவர்களில், ஒருவர் மற்றவரின் மனைவியைச் சீரழிக்க சதி செய்ததாக, அந்த நால்வரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சம்பவம் சிங்கப்பூரில் நிகழ்ந்துள்ளது.
அந்தப் பெண்களைச் சீரழித்ததாக மேலும் மூன்று ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இம்மூவருக்கும் முதலில் குறிப்பிட்ட நான்கு ஆடவர்களுக்கும் எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது என்பதோ இந்த மூவரும் திருமணமானவர்களா இல்லையா என்பதோ தெரியவில்லை.
இந்த ஏழு சிங்கப்பூரர்களும் கடந்த மாதம் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். குற்றம் சாட்டப்பட்ட அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டது.
கடந்த 2010 முதல் 2018 வரை பல தொடர் பாலியல் குற்றங்களில் அவர்கள் ஈடுபட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
தீவின் வடகிழக்குப் பகுதியில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புகள் உட்பட பல இடங்களில் இந்தச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.
குறைந்தபட்சம் நான்கு பெண்கள் இவர்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது.
பாலியல் வன்கொடுமை, வன்புணர்வு ஆகியவற்றுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படிகள் போன்றவை விதிக்கப்படலாம். 50 வயதுக்கு மேற்பட்ட குற்றவாளிக்கு பிரம்படியிலிருந்து விலக்கு உண்டு.
குற்றச்சாட்டுகளின் விபரம்:
1. குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு (முதல் நபர்) 38 வயது. அவர் மீது ஏழு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- 2010ஆம் ஆண்டுவாக்கில் 29 வயது பெண்ணுடன் வன்புணர்வு கொள்ள மற்றொரு ஆடவருடன் (இரண்டாம் நபர்) சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது.
- 2012ஆம் ஆண்டில், அப்போது 35 வயதாக இருந்த மற்றொரு பெண்ணை இரு வேறு சமயங்களில் சீரழித்தது.
- 2013ஆம் ஆண்டில் 36 வயதுப் பெண்ணை சீரழித்தது.
- 2013ஆம் ஆண்டுவாக்கில் 32 வயதுப் பெண்ணைச் சீரழிக்க வேறொரு நபர் (மூன்றாம் நபர்) உடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது.
- 2014ஆம் ஆண்டுவாக்கில் 33 வயதுப் பெண்ணைச் சீரழிக்க இன்னொரு நபர் (நான்காம் நபர்) உடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது.
- 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அப்போது 42 வயதாக இருந்த ஒரு பெண்ணைச் சீரழித்தது.
2. குற்றச் செயலில் ஈடுபட்ட 43 வயதான இரண்டாவது நபர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
- 2010ஆம் ஆண்டில் 38 வயதுப் பெண்ணைச் சீரழித்தது.
- 2010ஆம் ஆண்டில், அப்போது 29 வயதான மற்றொரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தது.
- 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், குற்றம் சாட்டப்பட்ட முதல் நபருடன் சேர்ந்து, அப்போது 42 வயதுப் பெண்ணைச் சீரழிக்க சதித் திட்டம் தீட்டியது.
3. குற்றச் செயலில் ஈடுபட்ட 51 வயதான மூன்றாவது நபர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
- 2013ஆம் ஆண்டில் 32 வயதுப் பெண்ணைச் சீரழித்து, வன்புணர்வு கொண்டது.
4. குற்றச் செயலில் ஈடுபட்ட 41 வயதான நான்காவது நபர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
- 2012ஆம் ஆண்டுவாக்கில், 33 வயதுப் பெண்ணை இரு வேறு சமயங்களில் சீரழிக்க, குற்றம் சாட்டப்பட்ட முதல் நபருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது.
- 2013ஆம் ஆண்டுவாக்கில், 36 வயதுப் பெண்ணைச் சீரழிக்க, குற்றம் சாட்டப்பட்ட முதல் நபருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது.
- 2014ஆம் ஆண்டில், அப்போது 33 வயதுப் பெண்ணைச் சீரழித்தது.
5. குற்றச் செயலில் ஈடுபட்ட 34 வயதான ஐந்தாவது நபர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
- 2017, 2018க்கு இடைப்பட்ட காலத்தில் 38 வயதுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து இரு வேறு சமயங்களில் சீரழித்தது.
6. குற்றச் செயலில் ஈடுபட்ட 41 வயதானஆறாவது நபர் மீது ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
- 2010ஆம் ஆண்டில், 29 வயதுப் பெண்ணைச் சீரழித்தது.
7. குற்றச் செயலில் ஈடுபட்ட 45 வயதான ஏழாவது நபர் மீது ஒரு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
- 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதி 47 வயதுப் பெண்ணைச் சீரழித்தது.
#பாலியல் குற்றம்

