சிங்கப்பூரில் உள்ள அனைத்து 'ஆக்டிவ்எஸ்ஜி' நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றை 65 வயது மற்றும் அந்த வயதைத் தாண்டியவர்களும் வரும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து இலவசமாகப் பயன்படுத்தலாம்.
கலாசாரம், சமூகம் மற்றும் இளையர் அமைச்சர் கிரேஸ் ஃபூ, நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் மூப்படைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் நான்கில் ஒருவர் 65 வயது அல்லது அதைத் தாண்டியவர்களாக இருப்பர். மூத்த சிங்கப்பூரர்களின் எண்ணிக்கை 900,000ஐ எட்டும் என்று அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.
வயதானவர்கள் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியத்துடன் நடமாடுவதோடு சமூகத்துடன் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவும் உடற்பயிற்சியும் விளையாட்டும் கைகொடுக்கும்.
ஆக்டிவ்எஸ்ஜியின் 26 நீச்சல் குளங்களிலும் 24 உடற்பயிற்சிக் கூடங்களிலும் இப்போது மூத்தோருக்கு நுழைவுக் கட்டணமாக 50 காசுகளில் இருந்து $1.50 காசுகள் வரை வசூலிக்கப்படுகிறது.
புதிய இலவச நுழைவுக் கட்டண அறிவிப்பு மூலம் 500,000க்கும் மேற்பட்ட மூத்த சிங்கப்பூரர்கள் பலனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது எஸ்ஜியின் உடற்பயிற்சிக் கூடங்களில் சில மூத்தோருக்கு ஏற்புடைய வகையிலான பயிற்சிக் கருவிகள் பொருத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டுக்குள் இயல்பான அனைத்து வயதினருக்கும் பொருந்தக்கூடிய வகையில் உடற்பயிற்சி நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
குடியிருப்பு வட்டாரங்களில் அமையவிருக்கும் மூன்று புதிய உடற்பயிற்சி நிலையங்கள் பற்றியும் அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகளுக்கான பெருந்திட்டத்தின்கீழ் அமையவுள்ள புதிய வசதிகள் பற்றியும் அமைச்சர் கிரேஸ் ஃபூ நாடாளுமன்றத்தில் தெரிவித்த தகவல்களை விரிவாகத் தெரிந்துகொள்ள நாளைய (மார்ச் 7, 2020) தமிழ் முரசு நாளிதழின் அச்சுப் பிரதியை நாடுங்கள்!

