உலக அளவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114,000ஐயும் தாண்டி கிடுகிடுவென உயர்ந்து வருகிறது; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,000ஐத் தாண்டியுள்ளது. 5,000க்கும் மேற்பட்டோர் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட சில நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு சிங்கப்பூரில் அனுமதி மறுக்கப்பட்டாலும், இங்கு வரும் பயணிகளின் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்படுவதுடன், கிருமித்தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியும் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், கிருமித்தொற்றுக்கு ஆளான சுற்றுப்பயணிகள் மற்றும் குறுகியகால வருகை அட்டை உடையோர், கடந்த சனிக்கிழமை (மார்ச் 7) முதல் சிங்கப்பூரில் பெறும் சிகிச்சைக்கான முழு செலவையும் அவர்களே ஏற்க வேண்டும் எனச் சுகாதார அமைச்சு நேற்று (மார்ச் 9) அறிவித்தது.
உலகளவில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்துவரும் வேளையில், இங்குள்ள மருத்துவமனைகளில் வளங்களை முன்னுரிமைப்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
எனினும், இத்தகைய பிரிவினருக்கான மருத்துவப் பரிசோதனைக் கட்டணத்தை சிங்கப்பூர் தொடர்ந்து தள்ளுபடி செய்யும் என்று அவர் கூறினார்.
"ஆனால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், சிகிச்சைக்கான கட்டணத்தை அவர்கள் செலுத்த வேண்டும்," என்று அப்பேச்சாளர் விவரித்தார்.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால வருகை அட்டை வைத்திருப்போர் இங்குள்ள பொது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால், அவர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசாங்கம் தொடர்ந்து ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
#கொவிட்-19 #கொரோனா #சிங்கப்பூர் #சுற்றுப்பயணிகள் #தமிழ்முரசு


