(காணொளி) கைபேசியைப் பார்த்தபடி சாலையைக் கடந்த மின்-ஸ்கூட்டர் ஓட்டுநரை இடித்துத் தள்ளிய கார்

(காணொளி) கைபேசியைப் பார்த்தபடி சாலையைக் கடந்த மின்-ஸ்கூட்டர் ஓட்டுநரை இடித்துத் தள்ளிய கார்

1 mins read
acc0b240-9567-46df-b3c1-4bb6a93982c4
-
multi-img1 of 2

போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சாதகமாக இல்லை; கைபேசித் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்; வாகனங்கள் வருவதைக் கவனிக்கவில்லை; இத்தனைக்கும் மேலாக, சாலயைக் கடக்கும்போது தனிநபர் நடமாட்டச் சாதனத்தை (மின்-ஸ்கூட்டர்) ஓட்டிச் சென்றார் இளையர் ஒருவர்.

விளைவு?

கார் ஒன்று அந்த இளையர் மீது மோதியது.

உட்லண்ட்ஸ் அவென்யூ 1ல் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) பிற்பகல் 1.25 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளியை, அந்த காரின் ஓட்டுநரே வெளியிட்டார்.

சாலையைக் கடக்கும்போது அந்த இளையர் இரண்டு கார்களுக்கு இடையே தனிநபர் நடமாட்டச் சாதனத்தை ஓட்டிச் சென்றதைக் காணொளி காட்டியது.

அந்த இளையர் தலையைக் குனிந்திருந்ததைப் பார்த்தால், அவர் தமது கைபேசியில் எதையோ பார்த்தது தெரிந்தது.

கைபேசியிலிருந்து கண்களை அகற்றி நிமிர்ந்து பார்ப்பதற்குள் இந்த விபத்து நிகழ்ந்து வைட்டது.

இளையர் வருவதைத் தாமதமாகவே காரோட்டியால் பார்க்க முடிந்தது. சரியான நேரத்தில் நிறுத்த முடியாததால் இளையர் மீது கார் மோதியது.

அந்த இளையர் கீழே விழுந்ததுடன் அவரது கைபேசியும் பறந்து சென்று விழுந்தது.

உடனடியாக எழுந்த அந்த இளையர், தனது வண்டியையும் கைபேசியையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

தனிநபர் நடமாட்டச் சாதனங்களை சாலையில் ஓட்ட அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#பிஎம்டி #சிங்கப்பூர்

குறிப்புச் சொற்கள்