ஜூரோங் ஆற்றுக்கு அருகில் உள்ள தொழிற்பூங்காவில் ஒரு சேமிப்புக் கிடங்கில் நேற்றிரவு (மார்ச் 9) பற்றியெரிந்த தீயை, தீயணைப்பாளர்கள் ஐந்து மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
யாருக்கும் காயமில்லை என்று கூறப்பட்டது.
எண் 18 ஜாலான் பெசுட்டில் நிகழ்ந்த இந்த தீச்சம்பவம் பற்றி இரவு 8.10 மணிக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
அடந்த கரும்புகையையும் கொழுந்து விட்டெறிந்த தீயையும் பார்க்க முடிந்ததாக தேபான் கார்டன்ஸ், ஜூரோங் ஈஸ்ட் பகுதிகளைச் சேர்ந்த இணையவாசிகள் குறிப்பிட்டனர்.
இன்று அதிகாலை 1 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகப் படை தெரிவித்தது.
மொத்தம் 31 அவசரகால வாகனங்களுடன் சுமார் 80 வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
சேமிப்புக் கிடங்கில் இருந்த பிளைவுட், வீட்டு உபயோக மின்பொருட்கள், தளவாடங்கள் உட்பட பொருட்கள் எரிந்து போனதாக படை தெரிவித்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது சேமிப்புக்கிடங்கு முழுவதிலும் தீ பரவியிருந்தது.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பாகவே, அங்கிருந்த சுமார் 50 பேர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர்.
தீயணைப்பு பணிகளைக் காட்டும் காணொளி ஒன்றையும் படை வெளியிட்டது. தீப்பற்றக் காரணம் பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விசாரணை மேற்கொண்டுள்ளது.
#ஜூரோங் #தீ #சிங்கப்பூர்

