ஜூரோங்கில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதியில் 51 வயது இந்திய ஊழியர் ஒருவர், 29 வயதான மற்றொரு இந்திய ஊழியரின் விருப்பமின்றி, அவர்மீது பாலியல் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக 51 வயது ஆடவருக்கு ஆறு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துக்கு முன்பு இவ்விரு ஆடவர்களுக்கும் அறிமுகம் இருந்திருக்கவில்லை.
இந்திய நாட்டவரான பருப்பா கௌண்டர் குழந்தை எனும் 51 வயது ஆடவர், பாதிக்கப்பட்ட நபரின் விருப்பமின்றி அவர் மீது பாலியல் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி இரவு 10 மணி வாக்கில் தங்கு விடுதிக்குத் திரும்பிய பருப்பா, மது அருந்திய பிறகு, படிக்கட்டுகளுக்கு அருகில் 29 வயது ஆடவர் ஒருவர் படுத்து உறங்கிக்கொண்டிருந்ததைக் கண்டார்.
அந்த இளையரிடம் சென்ற பருப்பா, பாலியல் தொடர்பான செயல்களில் ஈடுபட்டார்.
கண் விழித்துப் பார்த்த 29 வயது ஊழியர், திடுக்கிட்டு, பருப்பாவின் முகத்தில் குத்தினார். உடனே பருப்பா அங்கிருந்து ஓடிவிட்டார்.
இந்தச் சம்பவம் பற்றி பாதுகாவல் அதிகாரி ஒருவரிடம் பாதிக்கப்பட்ட அந்த ஊழியர் தெரிவித்தார். அதனையடுத்து போலிசாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
பருப்பாவுக்கு ஆறு ஆண்டு, ஆறு வார சிறைத் தண்டனை பருப்பாவுக்கு விதிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இத்தகைய குற்றத்துக்காக அண்மையில் தாய்லாந்து நாட்டவர் ஒருவருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சாலெம்னாரோங் நாம்ஸ்ரீ எனும் 46 வயது சுற்றுப் பயண ஒருங்கிணைப்பாளர், 24 வயது ஆடவர் ஒருவரின் விருப்பமின்றி அவர்மீது பாலியல் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக இம்மாதம் 3ஆம் தேதி அவருக்கு ஐந்தரை ஆண்டு சிறைத் தண்டனை, 3 பிரம்படிகள் விதிக்கப்பட்டன.
தாய்லாந்து நாட்டவர்களான இவ்விருவரும் கெவனா ரோட்டில் இருக்கும் கிராண்ட் சென்ட்ரல் ஹோட்டலில் ஒரே அறையில் தங்கியிருந்தபோது நாம்ஸ்ரீ பாலியல் செயல்களில் ஈடுபட்டார். பாதிக்கப்பட்ட நபர் அப்போது உறங்கிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விருப்பமில்லாத ஒருவர் மீது பாலியல் செயல்களில் ஈடுபடும் குற்றத்தைப் புரிவோருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம், பிரம்படி போன்றவை விதிக்கப்படலாம்.
பருப்பாவுக்கு 51 வயது என்பதால் அவருக்கு பிரம்படிகள் கிடையாது.
#வெளிநாட்டு ஊழியர் #சிங்கப்பூர்

